;
Athirady Tamil News

அணுசக்தி, டீசல் இல்லாமல் வெறும் காற்றில் இந்த பிரமாண்ட கப்பல் எப்படி இயங்கும்?

0

காற்றை எரிசக்தியாக பயன்படுத்தி படகுகளை இயக்குவது பழமையான கடல்சார் தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது புதிய பரிமாணத்தை எட்ட உள்ளது.

பிரிட்டனில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சரக்கு கப்பல், தனது முதல் சோதனை பயணத்தை தொடங்கி உள்ளது. காற்று எரிசக்தி மூலம் இக்கப்பல் இயக்கப்படுவதே இந்த பயணத்தின் தனிச்சிறப்பு.

இந்தக் கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள கார்கில் நிறுவனம், காற்றின் மூலம் கப்பல்களை இயக்குவதற்கான தொழில்நுட்பம், கப்பல் போக்குவரத்துத் துறையை பசுமையான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கப்பலின் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில் ‘விண்ட்விங்ஸ்’ (Windwings) எனப்படும் பாய்மரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கப்பல் இயக்கப்படும்போது, அதிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் அளவு கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் கப்பல் போக்குவரத்துத் துறையின் பங்கு 2.1 சதவீதமாக உள்ளது.

சீனாவில் இருந்து பிரேசில் நோக்கி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பிக்சிஸ் ஓஷன் ( Pyxis Ocean) சரக்குக் கப்பலின் பயணம், காற்றின் மூலம் கப்பலை இயக்குவதற்கான உலகளாவிய முதல் சோதனையாக அமைய உள்ளது.

கப்பல்களை செலுத்துவதில் இந்தப் பாரம்பரிய முறைக்கு திரும்புவது கடலில் சரக்குகளை கொண்டு செல்வதற்கான முன்னோக்கிய வழியாக இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்..

டீசல் போன்ற எரிபொருளை கொண்டு கப்பல்களை இயக்காமல், அவை காற்றின் மூலம் இயக்கப்படும்போது, அதிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவை 30 சதவீதம் குறையலாம்.

MarineTraffic.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, பிக்சிஸ் ஓஷன் சரக்கு கப்பல், 229 மீட்டர் நீளமும், 43 ஆயிரம் டன்களுக்கு மேல் எடையும் கொண்டது.

கப்பல் போக்குவரத்துத் துறை, “கார்பன் அல்லாத (டிகார்பனைஷேசன்) பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் உள்ளது” என்கிறார் Cargill Ocean Transportation நிறுவனத்தின் தலைவர் ஜான் டீல்மேன்.

எந்த மந்திரமும், மாயமும் செய்து மிகப்பெரிய இந்த இலக்கை அடைய இயலாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, டிகார்பனைசேஷன் குறித்து கப்பல் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நபர்கள் யாரிடமாவது கேட்டால், அது மிகவும் கடினமான விஷயம்; விரைவில் இந்த இலக்கை அடைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வார்கள்” என்று டீல்மேன் பிபிசியிடம் கூறினார்.

ஆனால் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்று தான் நினைக்கிறேன். ஒவ்வொருவரும் இதில் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே, கப்பல் போக்குவரத்துத் துறையை புதிய தொழில்நுட்பத்தை நோக்கி எடுத்துச் செல்ல, இந்த சோதனை முயற்சியில் தங்களது நிறுவனம் இறங்கி உள்ளது என்று கூறுகிறார் டீல்மேன்.

Pyxis Ocean சரக்கு கப்பலில் பயன்படுத்தப்படும் காற்றின் மூலம் கப்பல்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம் , BAR எனப்படும் பிரிட்டிஷ் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது.

கடந்த 2017இல்,”Formula One of the Seas” எனப்படும் அமெரிக்க கோப்பைக்கான கப்பல் போட்டிக்காக, சர் பென் ஜன்ஸ்லியின் குழுவால் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

இது நாம் மிகவும் மெதுவாக மேற்கொண்டுள்ள திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் இது நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் மெக்லாரன் ஃபார்முலா ஒன் குழுவின் இயக்குநர் ஜான் கூப்பர் பிபிசியிடம் கூறினார்.

இந்த சோதனைப் பயணம் கடல்சார் தொழில் துறையில் திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர்.

“வரும் 2025 ம் ஆண்டுக்குள் புதிய கட்டுமான கப்பல்களில் பாதியளவு காற்றில் இயங்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கூப்பன்.

ஒரு பாய்மரத்தின் மூலம் ஒன்றை டன் எரிபொருள் சேமிக்கப்படும் என்பதால், ஒரு சரக்கு கப்பல் பொருத்தப்படும் நான்கு பாய் மரங்களின் மூலம், ஒரு நாளைக்கு ஆறு டன் எரிபொருள் சேமிக்கப்படும்.

இது 20 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைப்பதற்கு சமம். இந்த அளவு எரிபொருள் சேமிப்பும், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறைப்பும் இந்த திட்டம் குறித்த மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது என்கிறார் அவர்.

சரக்கு கப்பலை காற்றின் மூலம் இயக்குவதற்கான தொழில்நுட்பம் பிரிட்டனில் உள்ளது. ஆனால், கப்பல் வடிவமைப்பில் முக்கிய மூலப்பொருளான எஃகு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது. எஃகை இறக்குமதி செய்வதற்கு பிரிட்டன் அரசு ஆதரவு அளிக்காதது, இந்தப் புதிய தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்துவது போல் என்று வருத்தம் தெரிவிக்கிறார் கூப்பர்.

ஆண்டுதோறும் 837 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை குறைக்க, கப்பல் போக்குவரத்துத் துறை முயற்சித்து வருகிறது. கப்பல்களை இயக்குவதற்கான எரிசக்தியாக காற்றை பயன்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை அடையலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

புவி வெப்பமயமாதலுக்கு காரணமான அனைத்து வாயுக்களையும் 2050-க்குள் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வருவது என்று கப்பல் போக்குவரத்துத் துறை நிறுவனங்கள் கடந்த மாதம் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.

“இந்த விமர்சனத்தை பொய்ப்பிக்கும் ஆற்றல் காற்றுக்கு உண்டு. இந்த காற்றாலை எரிசக்தி மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள டின்டல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும், சரக்கு கப்பல் போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்றவருமான சைன் புல்லக்.

புதிய எரிசக்தியை பயன்படுத்தி கப்பலை இயக்குவதற்கான தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் அவகாசம் தேவைப்படலாம். ஆனால், அதற்கு முன், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கப்பல்களை, சுழலி (Rotor) மற்றும் பாய்மரங்கள் மூலம் இயங்கும் விதத்தில் மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

எதிர்காலத்தில் அனைத்து கப்பல்களுக்கும் கார்பன் இல்லாத எரிபொருள் தேவை. ஆனால், இந்த இலக்கை அடையும் வரை, ஒவ்வொரு பயணத்தை முடிந்தவரை திறமையாக கையாள வேண்டிய அவசியம் உள்ளது.கப்பல்களை மெதுவாக இயக்குவதும் இதில் ஓர் முக்கிய அம்சமாகும் என்று சைன் புல்லக் பிபிசியிடம் கூறினார்.

கடல்சார் தரவு நிறுவனமான கிளார்க்சன்ஸ் ரிசர்ச்சின் நிர்வாக இயக்குநர் ஸ்டீபன் கார்டன், “கப்பல்களை காற்றை கொண்டு இயக்குவதற்கான தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது இழுபறியான நிலையில் தான் உள்ளது” என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

“கடந்த 12 மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்த அளவில் இந்த எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை” என்கிறார் அவர்.

சர்வதேச அளவில் மொத்தம் 1,10, 000 கப்பல்கள் கட்டுமானத்திற்கான கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் காற்றின் உதவியுடன் இயங்கும் தொழில்நுட்பத்துடனான கப்பல்களின் கட்டுமானம் 100 க்கும் குறைவாகவே உள்ளது என்கிறார் ஸ்டீபன் கார்டன்.

இந்த எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்தாலும், காற்றாலை தொழில்நுட்பம் அனைத்து கப்பல்களுக்கும் ஏற்றதாக இருக்காது. உதாரணமாக, கப்பலில் இருந்து சரக்குகள் இறக்கப்படும் போது பாய் மரங்களின் பயன்பாடு சாத்தியமானதாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.

கப்பல் போக்குவரத்துத் துறையில் டிகார்பனைசேஷனுக்கான தெளிவான கொள்கைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. மேலும் கப்பல் கட்டும் தொழிலின் உலகளாவிய அளவு, பன்முகத்தன்மை மற்றும் சவால் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, டிகார்பனைசேஷன் போன்ற இத்துறையின் முக்கிய பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறுகிறார் கோர்டன்.

இருப்பினும் BAR தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகியான ஜான் கூப்பர், கப்பல் போக்குவரத்துத் துறையில் காற்று எரிசக்தியின் பயன்பாடு குறித்து மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்.

இத்துறையில் காற்றை எரிசக்தியாக பயன்படுத்துவதற்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமானது; இருப்பினும் தற்போதைக்கு இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவே திருப்தி அடையும் படி உள்ளது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.

“கப்பல் போக்குவரத்துத் துறை, காற்று எரிசக்தி தொழில்நுட்பத்திற்கு திரும்புவதை பொறியாளர்கள் விரும்பவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்துக்கு அத்துறை திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏனெனில் கப்பல்களை இயக்கும் பெரிய இயந்திரங்களின் பயன்பாடு கடல்சார் வணிகத்திற்கான வழிகளையும், கடல் பாதைகளையும் அழித்துவிட்டது. இந்த போக்கை சிறிது சிறிதாக மாற்ற முயற்சித்து வருகிறோம்” என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.