பிரிக்ஸ் விரிவாக்கம்: அமெரிக்க ஆதிக்கத்தை தகர்க்க இந்தியா, சீனா, ரஷ்யா வியூகமா?
ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இனி 11 ஆக இருக்கும். அர்ஜென்டினா, எகிப்து, இரான், எத்தியோப்பியா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரிக்ஸ் உறுப்பினர் அந்தஸ்தை பெற உள்ளன.
இந்த விரிவாக்கம் ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நாடுகளின் பொதுவான நலன்கள் எந்த அளவுக்கு விரிவடையும் என்பதுதான் கேள்வி.
“பிரிக்ஸ் விரிவாக்கம் உலகில் அமைதி மற்றும் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்,” என்று ஷி ஜின்பிங் ஜோஹேனஸ்பர்க்கில் உலகத் தலைவர்களிடம் கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. பின்னர் தென்னாப்பிரிக்கா அதில் சேர்க்கப்பட்டது.
இந்த நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான உலக முறைமைக்கு ஒரு மாற்றாக கருதப்படுகின்றன. உலக அமைப்பில் மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்தை உடைக்க சீனா தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
யதார்த்தத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பெரிதாக எதுவும் பொதுவாக இருப்பதாக தென்படவில்லை என்று லண்டனை தளமாகக் கொண்ட எஸ்ஓஏஎஸ் சைனா இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனர் ஸ்டீவ் சாங் கூறுகிறார்.
ஆனால், எல்லா நாடுகளும் ஒரே போன்ற பொதுவான எதிர்காலத்தைத் தேடுகின்றன. மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் யாரும் வாழ விரும்பவில்லை என்று உறுப்பு நாடுகளுக்குக் காட்ட ஷி ஜின்பிங் முயற்சிக்கிறார்.
“சர்வாதிகார ஆட்சியாளர்கள் அந்தந்த நாடுகளில் பாதுகாப்பாக உணரும் ஒரு மாற்று உலகத்தை சீனா வழங்குகிறது,” என்கிறார் பேராசிரியர் சாங்.
“இந்த நாடுகள் ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் நிபந்தனைகளை ஏற்காமல், வளர்ச்சிக்கான மாற்று திசையை கண்டுபிடிக்க முடியும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகளை வரவேற்பதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமாபோஸாவின் மகிழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது.
“பிரிக்ஸ் அமைப்புடன் கூட்டுறவை உருவாக்கும் நாடுகளின் நலன்கள் முழுமையாக கவனித்துக்கொள்ளப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
”எதிர்காலத்தில் மேலும் பல நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக மாறும். முக்கிய உறுப்பு நாடுகள் இதற்கான அளவுகோல்களை முடிவு செய்யும். அதன் பிறகு புதிய உறுப்பினர்களுக்கு நுழைவு வழங்கப்படும்,” என்றார் அவர்.
ஆனால் இம்முறை எத்தனை நாடுகளை உறுப்பினர்களாக்க வேண்டும், இதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இதில் புதிதாக 5 உறுப்பினர்கள் சேர்க்கப்பட இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. இதன் பின்னர் பிரிக்ஸ் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாஸ்யு லுலா டாசில்வா இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளுடனான உறவுகள் குறித்து அவர் மிகவும் கவனமாக இருக்கிறார்.
இதனுடன் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் விஷயத்திலும் அவருக்கு சொந்த விருப்பம் உள்ளது.
புதன்கிழமை அதிகாலையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக நடந்தது.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடந்து வந்ததை இது உணர்த்தியது.
அதன்பிறகு ஆறாவது நாட்டை உறுப்பினராக்கும் முடிவு திடீரென்று எடுக்கப்பட்டது.
யுக்ரேனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம் என்று அச்சம் காரணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வீடியோ இணைப்பு மூலம் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.
தனது உரையில் மேற்கத்திய நாடுகளை மீண்டும் குறிவைத்த அவர், அவர்களின் ‘புதிய தாராளமயம்’ வளரும் நாடுகளின் பாரம்பரிய மதிப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.
“அதேநேரத்தில் எந்த நாடும் அல்லது பிராந்தியமும் ஆதிக்கத்திற்கு அடிபணியத் தேவையில்லாத இந்த ‘பல்முனை உலக முறைமைக்கும்’ அவை ஒரு சவாலாக உள்ளன,”என்று புதின் குறிப்பிட்டார்.
அவர் அமெரிக்காவை குறிவைத்துப்பேசினார் என்று சொல்லத் தேவையே இல்லை.
அமெரிக்கா அங்கு இல்லாத காரணத்தால் அந்த நாடு குறித்து பல சூழல்களில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பதில்
இருப்பினும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், பிரிக்ஸ் விரிவாக்கத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
பல முக்கியமான விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகளின் கருத்துகள் வெவ்வேறானவை என்றார் அவர்.
“இந்த நாடுகளின் கருத்துவேறுபாடுகள் காரணமாக அமெரிக்காவிற்கு எதிராக எந்த ஒரு புவிசார் அரசியல் போட்டியாளரும் உருவாகும் வாய்ப்பு தென்படவில்லை,” என்று அவர் கூறினார்,
அது சரி என்று நிரூபணமும் ஆகக்கூடும்.
புதிதாக சேர்க்கப்பட உள்ள ஆறு உறுப்பினர்களில் யாருமே அமெரிக்காவுக்கு எதிரானவர்களாகத் தெரியவில்லை என்று வாஷிங்டனில் உள்ள குயின்ஸி இன்ஸ்டிட்யூட்டின் குளோபல் சவுத் திட்டத்தின் இயக்குனர் சாரங் ஷிடோரே தெரிவித்தார்.
“இவை வெவ்வேறுவிதமான நாடுகள் என்ற செய்தி மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவை எதுவும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் அல்ல. அதிகாரபூர்வ
கூட்டணி பங்காளிகளும் அல்ல. இதில் இரண்டு அல்லது மூன்று நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கலாம். ஆனால் பரந்த அளவில் பார்த்தால், இது அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் குழு அல்ல,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்,
இத்தனை அம்சங்கள் இருக்கும் போதிலும் பிரிக்ஸ் விரிவாக்கம் என்பது மாற்றத்தின் அறிகுறியாகும்.
“எல்லா விதிகளையும் அமெரிக்காதான் முடிவு செய்யும், எல்லா அமைப்புகளிலும் அதுதான் தலைமை வகிக்கும் என்ற உலகம் இப்போது இல்லை. இதில் எந்த வித சந்தேகமும் இல்லை,” என்று ஷிடோரே கூறினார்.
“உண்மை என்னவென்றால், புதிய உலக முறைமையில் ஒருவரை மாற்றுவதற்கு பதிலாக, அவருடன் இன்னொருவரை சேர்ப்பதற்கான தேடல்தான் நடக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பரம் கருத்துகளை மதிப்பதாகக் கூறுகின்றன. உண்மையில் இது ஒரு வகையான தூதாண்மை அணிசேரல். இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்படுகிறது, ஏதோ ஒன்று பெறப்படுகிறது.
புதினை கைது செய்யும் நிலைமை வரவில்லை. இன்றைய நவீன தொழில்நுட்பம் காரணமாக அவரால் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க முடிந்தது.
இருப்பினும் பிரிக்ஸ் மாநாட்டின் போது உறுப்பினர்களின் விரிவாக்கத்தில் சீனா வெற்றி பெற்றது. பொதுவான நாணயம் ஒரு முக்கிய விஷயமாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற தீவிர முயற்சியை பிரேசில் மேற்கொண்டது.
இந்தியா, அமெரிக்காவுடனான தனது உறவை சமநிலைப்படுத்துவதைக் காண முடிந்தது. மாநாட்டை சிறப்பாக நடத்தியதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.