விடுதலைப் புலி “ஒற்றை கண்” சிவராசன் முதல் கொலையாளிகள் புகலிடமாக பெங்களூர்- ஊடுருவிய 3 சிங்களர் கைது!!
இலங்கையில் 12 கொலைகளை செய்துவிட்டு கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தற்போது பெங்களூரில் தஞ்சமடைந்த 3 சிங்களர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பிரச்சனைகளில் பெங்களூர் எப்போதும் ஒரு வகையில் இடம்பெற்றுவிடுகிறது. 1986-ல் பெங்களூர் சார்க் மாநாடு நடைபெற்ற போது தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. தமிழ்நாட்டில் எப்படி விடுதலைப் புலிகள் நடமாடினார்களோ அதேபோல கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட இடங்களிலும் சுதந்திரமாக உலா வந்தனர்.
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலிகள் கர்நாடகாவில் தஞ்சமடைந்தனர். அப்போது போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் விடுதலைப் புலிகள் சிக்கினர். இதன் உச்சகட்டமாக ராஜீவ் காந்தி கொலையாளி சிவராசன், சுபா உள்ளிட்டோர் கோனனேகுன்டே வீட்டில் பதுங்கி இருந்த போது சுற்றி வளைக்கப்பட்டனர். இதனையடுத்து சிவராசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சுபா உள்ளிட்ட சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வரிசையில் அவ்வப்போது வெளிநாட்டு குற்றவாளிகள் பெங்களூரில் சிக்குவதும் வழக்கம்.
தற்போது இலங்கையில் 12 கொலைகளை செய்துவிட்டு கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 3 சிங்களர், பெங்களூரில் பதுங்கி இருந்த போது சிக்கி உள்ளனர். இது தொடர்பாக பெங்களூர் போலீசார் தெரிவிக்கையில், தனுஷ்கோடி- ராமேஸ்வரம் வழியாக இலங்கை கொலையாளிகள் இந்தியாவுக்குள் ஊடுருவினர்; அங்கிருந்து தரைமார்க்கமாக பெங்களூர் வந்துள்ளனர். பெங்களூரில் இந்த கொலையாளிகளுக்கு உதவிய நபர்களும் சிக்கி இருக்கின்றனர். இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கிறதா? வெளிநாட்டு கும்பல்களுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றனர்.
இலங்கை கொலையாளிகள் கசன் குமார சங்கா, அமில நூவன், ரங்க பிரசாத் ஆகியோர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் சோதனை நடத்தியதில் 23 போலி ஆதார் கார்டுகள், 13 செல்போன்கள் சிக்கி இருக்கின்றன. சிங்கள மொழியிலான 9 விசிட்டிங் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.