விடுதலைப் புலிகளை இந்தியா, இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சி: 14-வது கூட்டாளி லிங்கம் கைது- என்.ஐ.ஏ.!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா மற்றும் இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் 14-வது கூட்டாளி லிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள்; இதன் மூலமான பணத்தை வைத்து இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கின்றனர் என்ற தகவல் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கிய சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இவ்வழக்கில் ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட்னர்.
இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில் போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மூலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான குணாவின் கூட்டாளி லிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தது இவ்வழக்கில் இது வரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கி இலங்கையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.