;
Athirady Tamil News

48 மணி நேரம்.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. 4 நாட்டு தூதர்களுக்கு நைஜர் எச்சரிக்கை!!

0

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். இதன் தலைநகர் நியாமே. இங்கு அதிபராக இருந்த மொகமெட் பசோம் (Mohamed Bazoum), ஜன்தா (junta) எனப்படும் ராணுவ குழு நடத்திய சிறு கிளர்ச்சியால் கடந்த ஜூலை 26 அன்று பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இவருக்கு பதிலாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி (Abdourahamane Tchiani) தன்னைத்தானே புது அதிபராக அறிவித்து கொண்டு ஆட்சியில் அமர்ந்தார். முன்னாள் அதிபரும் அவர் குடும்பத்தினரும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்தா அமைப்பு 21 பேர்களை கொண்ட ஒரு புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) இந்த ஆட்சி மாற்றத்தை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் பசோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமென்று ஜன்தா அமைப்பிற்கு எகோவாஸ் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இதற்கு ஜன்தா பணியவில்லை. நைஜரில் அமைதியான முறையில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டு வர அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயற்சித்தன. ஆனால் அவையும் தோல்வியில் முடிந்தது. ஆகஸ்ட் 18 அன்று, “முடிவில்லாத பேச்சுவார்த்தையை ஜன்தா அமைப்புடன் நடத்த முடியாது. தேதி அறிவிக்காமல் ஒரு முக்கிய நாளில் ராணுவ ரீதியாக நைஜரில் ஜனநாயகத்தை மலரச் செய்வோம்” என எகோவாஸ் அமைப்பு அறிவித்தது. இந்த எச்சரிக்கையையும் ஜன்தா அலட்சியப்படுத்தியது.

இந்நிலையில் தற்போதைய நைஜர் அரசு, பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தூதர்கள், நைஜர் நாட்டை விட்டு 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது. “நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை” என பிரான்ஸ் நாடு உடனடியாக பதிலளித்தது. தொடர்ந்து நடக்கும் ரஷிய – உக்ரைன் போரினால் சரிந்து வரும் உலக பொருளாதாரம், மற்றொரு போர் நைஜரில் ஏற்பட்டால் மேலும் பாதிப்படையலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.