விண்வெளிக்கு பெண் ரோபோட்-ஐ அனுப்புவோம் – மத்திய மந்திரி அதிரடி!!!
இதுவரை எந்த நாடும் புரியாத சாதனையாக நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனை அடுத்து பல விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்த இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து விவரித்தார். அப்போது அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நிதி பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். சந்திரயான்-3 திட்டத்திற்கு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் முயற்சிகளுக்கு கோவிட் தொற்று நெருக்கடிகளினால் தடை ஏற்பட்டது.” “தற்போது சந்திரயான்-3 வெற்றி அடைந்ததை அடுத்து ககன்யான் உட்பட பல திட்டங்களில் இனி இஸ்ரோ தீவிரம் காட்டும்.
இதன்படி ககன்யான் திட்டத்திற்காக, அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதலில் ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு சோதனை விண்கலனை அனுப்பும்.” “அடுத்த கட்டமாக “வியோமித்ரா” எனும் பெயரில் ஒரு பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பெண் மனித இயந்திரம் மனிதர்களின் நடவடிக்கைகளையும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்.” “இந்த இரு முயற்சிகளும் வெற்றி அடைந்ததும், அதில் இருந்து கிடைக்கும் அனுபவங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அதன்படி மூன்றாவது முயற்சியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதும் முக்கியம்,” இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.