ரூ.76 ஆயிரம் லேப்-டாப்புக்கு பதிலாக வந்த ஸ்பீக்கர்கள்: கல்லூரி மாணவர் அதிர்ச்சி!!
சமீபகாலமாக பெரும்பாலான பொருட்களை ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவரான அதர்வா கண்டேல்வால் என்பவர் பிளிப்கார்ட்டில் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள லேப்-டாப் ஆர்டர் செய்திருந்தார். கடந்த 13-ந் தேதி டெலிவரி செய்யப்பட வேண்டிய அந்த ஆர்டர் 15-ந் தேதி வந்துள்ளது. உடனே மாணவர் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சேவை மையத்தை அணுகிய போது அவரது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும் என கூறி உள்ளனர். அதன்படி அந்த எண்ணை கொடுத்து டெலிவரி பெற்றுக் கொண்ட மாணவர் அதர்வா தனது ஆர்டரை திறந்து பார்த்த போது அதில் லேப்-டாப்புக்கு பதில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர்கள் மட்டும் இருந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் சேவை மையத்தை மீண்டும் அணுகிய போது அங்கிருந்த ஊழியர்கள், எங்களிடம் ரிட்டர்ன் பாலிசி இல்லை என கைவிரித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவர் அதர்வா தனது வலைதள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்தார். அதில், என்னிடத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் என எல்லா ஆதாரங்களும் இருப்பதாக கூறி இருந்தார். இதை பார்த்த பயனர்கள் பிளிப்கார்ட்டின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.