அசாமில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் கண்ணைக் கவரும் வகையில் பேட்மிண்டன் மைதானம்!!
பொதுவாக மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படும். சில இடங்களில் பூங்கா உருவாக்கி, பயன்படுத்தப்படும். ஆனால், அசாமில் உள்ள ஒரு இடத்தில் தொழில் அதிபர் ஒருவரால் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி அழகிய பேட்மிண்டன் மைதானமாக உருவாகியுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள நா-அலி (Na-Ali) ரெயில்வே பாலம் செல்கிறது. ரெயில்வே பாலத்திற்கு கீழ் நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பேட்மிண்டன் மைதானமாக மாற்றினால் என்ன? என அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.பி. அகர்வாலாவிற்கு தோன்றியது. இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட பேட்மிண்டன் நிர்வாகத்தை அணுக, அவர்களும் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அகல்வாலா அந்த இடத்த அழகிய பேட்மிண்டன் மைதானமாக மாற்றினார். சுவற்றின் இரு புறங்களிலும், பேட்மிண்டன் பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். இந்த மைதானத்தை ஜோர்ஹாட் பேட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பேட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார். தொழில் அதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை கட்டி கொடுத்துள்ளார். கடந்த 16-ந்தேதி இந்த மைதானத்தை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மான தொடங்கி வைத்தார். விரைவில் இந்த மைதான நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.