அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் கறுப்பினத்தவர்களை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்த படி ஒடினார்கள். இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் பலியானார்கள். இவர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இனவெறி காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இனவெறி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜாக்சன் வில்லே போலீஸ் அதிகாரி வாட்டர்ஸ் கூறியதாவது:- இந்த தாக்குதல் இன வெறி காரணமாக நடந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர், கறுப்பின மக்களை வெறுத்து வந்துள்ளார். அவர் 20 வயதான வாலிபர் ஆவார். அவர் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி மற்றும் ஏ.ஆர்-15 வகை தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தினார். அவர் வெறுப்பு சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அந்த வாலிபர் ஒரு பெரிய குழுவை சேர்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் முற்றிலும் தனியாக செயல்பட்டுள்ளார் என்றார்.
ஆனால் தாக்குதல் நடத்தியவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் ஓக்லஹோ மாவில் உள்ள உயர் நிலைப்பபள்ளியில் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். மேலும் பாஸ்டன் நகரில் கரீபியன் திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளது.