பிறிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பம் இதுவரை வழங்கப்படவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு !!
அண்மையில் நடைபெற்ற பிறிக்ஸ் மாநாடு குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் சாஹ்ரா, “பிறிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டைத் தொடா்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து, அந்த அமைப்புடனான எங்களது எதிா்கால தொடா்பு குறித்து முடிவெடுப்போம்” என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் அண்மையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிறிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு இடம்பெற்றது.
இதில் ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு பிறிக்ஸ் அமைப்பினால் மாநாட்டில் வைத்து முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் போது பிறிக்ஸ் அமைப்பால் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்த வேளை, பலதரப்பட்ட அமைப்புகளுக்கு எப்போதுமே பாகிஸ்தான் ஆதரவளித்தே வருகின்றது. அதேபோல், பல நாடுகளைக் கொண்ட அமைப்புகளில் உறுப்பினராகவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது.
ஆனால், பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைவதற்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த கோரிக்கையையும் பாகிஸ்தான் முன்வைக்கவில்லை என்று மும்தாஜ் சாஹ்ரா பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.