பா.ஜனதாவை நம்பி ஏமாந்து விட்டோம்- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பல்!!
அ.தி.மு.க.வோடு எப்படியாவது இணைந்து செயல்பட வைத்து விடுவார்கள் என டெல்லி பாரதிய ஜனதா தலைவர்களை மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் அவர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்கள் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நாளில் இருந்தே டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை எங்களோடு பேசிக் கொண்டே இருந்தது. ஈரோடு இடைத்தேர்தலின்போது பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து விட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் வெளிப்படையாகவே பேச்சு நடத்தியதுபோல செயல்பட்டனர்.
ஆனால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் ஓ.பி.எஸ். இல்லாமலேயே தங்கள் பலத்த காட்ட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியதை கேட்டு பாரதிய ஜனதா மேலிடம் கடைசி நேரத்தில் எங்களை ஏமாற்றி விட்டது. பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வில் நீங்கள் எல்லாம் சேர்ந்து விடுவீர்கள் என்று அவர்கள் சொல்லியதை கேட்டு செயல்பட்டு வந்தோம். தற்போது தனிக்கட்சியை தவிர வேறு வழியே இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இவ்வாறு ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.