கர்நாடகா அரசியலில் பரபரப்பு மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. முதல்-மந்திரி சித்தராமையாவுடன் சந்திப்பு !!
கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையாவை பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பா.ஜனதாவில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்திய எல்லாப்பூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சிவராம் ஹெப்பார் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் சந்தித்து பேசியுள்ளார்.
அவர் தனது தொகுதி பிரச்சினைகள் சம்பந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார். அவரும் காங்கிரசில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.டி.சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜனதா எம்.எல்.ஏ.ஏக்கள் அடுத்தடுத்து முதல்-மந்திரியை சந்தித்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை பா.ஜனதாவிலேயே தக்க வைத்துக் கொள்ள அக்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் காங்கிரசில் இணைய முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் 2 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.