சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி பெயர் சூட்டிய விவகாரம் – இஸ்ரோ தலைவர் விளக்கம்! !!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மிக முக்கிய தகவல்களை சேகரித்து வைத்து இருப்பதாக அதன் தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ் சோம்நாத் கூறியதாவது.., “அறிவியலும், நம்பிக்கையும் இருவேறு பொருள்களை கொண்டவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ரோவர் திட்டமிட்டப்படி நகர்ந்து கொண்டு வருகிறது.” “ரோவர் சேகரித்து வழங்கி வரும் மிக முக்கிய தகவல்களை பெற்று வருகிறோம். இதுவரை இதுபோன்ற தகவலை பெற்றதே இல்லை.
வரும் நாட்களில் இதுபற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் விளக்கமாக தெரிவிப்பர். நிலவில் விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டுவதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு.” “இதுவரை பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நிலவில் சாராபாய் கிரேட்டர் என்ற இடம் உள்ளது. மற்ற நாடுகளும் தங்களின் அறிவியல் சாதனைதளுக்கு பல்வேறு பகுதிகளில் பெயர் சூட்டி இருக்கின்றன. இவ்வாறு பெயர் சூட்டிக்கொள்வது ஒரு பாரம்பரிய வழக்கம் தான்,” என்று தெரிவித்தார்.