டெல்லியில் 3 நாட்கள் விமான சேவை ரத்தாகிறது: சிரமங்களை பொறுத்துக்கொள்ள பிரதமர் மோடி வேண்டுகோள்!!
புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும், வருவதுமாக இருப்பார்கள் என்பதால், 3 நாட்களும் டெல்லி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 8-ந்தேதி நள்ளிரவு முதல் 10-ந் தேதி நள்ளிரவு வரை மாநகரின் பல பகுதிகளில் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து லுடி யன்ஸ் டெல்லிக்கு வருவோரின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு இடையேயான பஸ்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். ஆனால், பஸ் நிலையங்களில் அவற்றை நிறுத்த அனுமதிக்கப்படாது என போலீசார் தெரிவித்து உள்ளனர். டெல்லி மெட்ரோ சேவைகள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும், புதுடெல்லி பகுதியில் உள்ள சுப்ரீம் கோர்ட், கான் மார்க்கெட், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் போன்ற நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்பட உள்ளன. மேலும், முக்கிய மார்க்கெட் பகுதிகளான கன்னாட் பிளேஸ், கான் மார்க்கெட், மல்சா மார்க், ஷங்கர் மார்க்கெட், ஜன்பத், மோகன் சிங் பிளேஸ் மற்றும் பாலிகா பஜார் ஆகிய பகுதிகள் 3 நாட்களுக்கு மூடப்படும். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 விமானங்கள் புறப்படுகின்றன.
அதுபோல 80 விமானங்கள் வருகின்றன. இந்த 160 விமானங்களையும் 3 நாட்களுக்கு ரத்து செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஜி-20 மாநாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு தலைவர்களின் விமானங்களை இங்கு நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் 50 விமானங்கள் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் 20 விமானங்களை விமானப்படையின் பாலம் நிலையத்திலும், 20 விமானங்களை டெர்மினல்-1 லும், மற்ற விமானங்களை சரக்கு முனையம் மற்றும் டி-3 பகுதியில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம் என்பதால், அதற்காக முன்கூட்டியே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜி-20 உச்சி மாநாட்டை வெற்றியடைய செய்வதில் டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.
விருந்தினர்கள் அனைவரும் டெல்லிக்கு வருகின்றனர். நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும். வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளில் போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்பட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதற்காக டெல்லி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தேசியக் கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது’ என தெரிவித்தார்.