அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க கடற்படையினர் பலி!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது MV-22B ஒஸ்ப்ரே ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அமெரிக்க கடற்படையினர் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் தலைநகர் டார்வினுக்கு வடக்கே உள்ள மெல்வில்தீவுகளுக்கு செல்லும் வழியிலேயே இன்று (27) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
“காயமடைந்தவர்கள் ஐந்து கடற்படையினரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் டார்வினுக்கு சிகிச்சைக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும்” காவல்துறை மா அதிபர் மைக்கல் மர்பி தெரிவித்தார்.
அதிகளவான காவல்துறையினரும் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் மெல்வில் தீவில் மீட்புப் பணி மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக டார்வினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கருத்து தெரிவித்த வேளை, இந்தச் சம்பவம் துயரமானது என்றும், காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 2,500 படை வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.