சந்திரயான்-3: நிலவில் மோதி சூட்டிய ‘சிவசக்தி’ பெயர் நிலைக்குமா? சர்வதேச சமூகம் ஏற்குமா?!!
சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி நேரில் சந்தித்தார்.
அப்போது நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி ‘சிவசக்தி’ எனப் பெயரிட்டார். தற்போது இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமர் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை சார்ந்த பெயரை வைத்தது கேள்விக்கு உள்ளாக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற பெயரை சர்வதேச வானியல் கழகத்தின் விதிகள்படி வைக்கவே முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய பூனேவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், “சந்திரயான்-3இன் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்தின் வெற்றி என அறிவித்துவிட்டு, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு தன்னிச்சையாக ‘சிவசக்தி’ என பிரதமர் பெயரிட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று குறிப்பிடுகிறார்.
தனது பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாத அந்த விஞ்ஞானி, “இது குறித்துக் கேள்வியெழுப்பும் அறிவியலாளர்கள் இந்தியர்களுக்கும் இந்து மதத்திற்கும் விரோதமானவர்கள் எனப் போலியாகக் கட்டமைக்கப்படுவதாகவும்” வருத்தம் தெரிவித்தார்.
அதேவேளையில், கோள்களில் உள்ள பகுதிகளுக்கோ சிறுகோள்களுக்கோ இந்திய கலாசாரத்தின் அங்கமாக இருக்கும் இந்து கடவுள்களின் பெயர்களை வைப்பது இதுவே முதல்முறை என்றும் அல்ல. முன்பே லஷ்மி, ஹனுமான், கணேஷ் போன்ற பெயர்கள் சிறுகோள்களுக்கும் கோள்களின் பகுதிகளுக்கும் சூட்டப்பட்டுள்ளன.
ஆனால், இப்போது பிரதமர் சூட்டியுள்ள ‘சிவசக்தி’ என்னும் பெயர் சர்வதேச வானியல் கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டது இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதேபோல் சந்திரயான்-1 தூக்கி வீசப்பட்டு, அது போய் விழுந்த நிலாவின் பகுதியை ஜவஹர் புள்ளி எனப் பெயரிட வேண்டும் என்று அப்துல் கலாம் பரிந்துரைத்தார்.
அதை ஏற்றுக்கொண்டபோது இப்போது சிவசக்தி என்ற பெயருக்கு மட்டும் ஏன் கேள்வியெழுப்பப்படுகிறது என்று இந்தப் பெயரை ஆதரிக்கும் தரப்பால் கேட்கப்படுகிறது.
ஆனால், “ஜவஹர் புள்ளி என்பதும் நிலாவில் உள்ள பகுதிகளுக்குப் பெயர் வைப்பதற்கான சர்வதேச விதிமுறைகளின்படி இல்லை என்பதால், அதுவும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,” என்று புனேவை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத விஞ்ஞானி தெரிவித்தார்.
வான் பொருட்களுக்குப் பெயர் வைக்க இருக்கும் விதிகள் என்ன?
பிரதமர் சூட்டிய பெயர் அங்கீகரிக்கப்படுமா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, கோள்களுக்கும் அவற்றில் உள்ள பகுதிகளுக்கும் பெயர் வைக்க சர்வதேச வானியல் கழகம் விதிமுறைகளை வகுத்துள்ளது.
முன்பு ஐரோப்பிய வானியலாளர்கள் வைத்ததே பெயர் என்ற நிலைமை இருந்தது. ஆனால், 1919ஆம் ஆண்டு சர்வதேச வானியல் கழகம் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நிலை மாறியது. உலகின் பல்வேறு பண்பாடுகளையும் மதிக்கும் வகையில் வான் பொருள்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த சர்வதேச வானியல் கழகத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியா 1964ஆம் ஆண்டு அதில் இணைந்தது.
இந்தக் கழகம் வரையறுத்துள்ள விதிகளின்படி, வியாழன் கோளுக்கு அருகே சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களுக்கு புராண இதிகாசங்களில் உள்ள பெயர்களை, கண்டுபிடிப்பாளர் பெயர்களை, புகழ் பெற்ற சிந்தனையாளர்களின் பெயர்களை வைக்கலாம்.
ஆனால், நூறு ஆண்டுகளுக்கும் குறைவான வரலாறு கொண்ட தனிநபர்கள் அல்லது நிகழ்வுகளின் பெயர்கள், வணிகப் பெயர்கள், செல்லப் பிராணிகளின் பெயர்களை வைக்க அனுமதிக்கப்படாது.
அத்தகைய விதிமுறைகளின் அடிப்படையில் இந்திய புராணப் பெயர்கள் குறுங்கோள்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. அவை,
இவற்றைப் போலவே, 1993ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறுங்கோளுக்கு பாண்டிச்சேரி என்று கூடப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமானுஜம் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக எந்தெந்த வான் பொருட்களுக்கு என்ன மாதிரியான பெயர்களை வைக்கலாம் என்று வரையறுத்து சர்வதேச வானியல் கழகம் விதிமுறைகளை வகுத்துள்ளது.
அந்த சர்வதேச வானியல் கழக விதிகளின்படி, வெள்ளி கோளில் தரைப்பரப்பில் பெண் தெய்வங்கள் மற்றும் பெண் ஆய்வாளர்களின் பெயர்களை மட்டுமே சூட்ட வேண்டும்.
அதன் அடிப்படையில், வெள்ளி கோளில் உள்ள நேபாள பீடபூமியை போலத் தோற்றமளிக்கும் ஒரு பீடபூமிக்கு இந்து மத கடவுளாக அறியப்படும் லக்ஷ்மியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் புனேவில் உள்ள ஓர் ஆய்வு நிறுவனம் கேலக்ஸி பெரும்கொத்து ஒன்றைக் கண்டுபிடித்தது. சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளார்கள். ஏனென்றால், பெரும் நதிகளின் பெயர்களை கேலக்சி பெரும்கொத்துகளுக்கு வைக்க வேண்டும் என்பது விதி.
ஆகவே, இந்து கடவுள்களின் பெயர்களோ இந்தியாவுடன் தொடர்புடைய பெயர்களோ வான்பொருட்களுக்கு வைக்கப்படுவது முற்றிலுமாக எதிர்க்கப்படும் ஒரு விஷயமல்ல என்பது புரிகிறது.
ஆனால், “விதிமுறைகளுக்கு உட்பட்டு வைக்கப்படும் பெயர்களும், தன்னிச்சையாக, சார்புடன் வைக்கப்படும் பெயர் ஒன்று ஆகாது,” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெள்ளி கோள், கேலக்ஸி பெரும்கொத்துகள் போலவே நிலாவில் பெயர் வைக்க வேண்டுமென்றால் அதற்கும் சில விதிமுறைகளும் வரையறைகளும் உள்ளன. அவை,
மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலான பிரபல விஞ்ஞானிகள், வானியல், கோளியல், விண்வெளி அறிவியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய, அந்தத் துறையில் கணிசமான பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை வைக்கலாம்.
சான்றாக, “அமெரிக்காவின் அப்பல்லோ 11 தரையிறங்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி ‘அமைதிக் கடல்’ (Sea of Tranquility) என்றும் தரையிறங்கிய புள்ளியை ‘அமைதித் தளம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
அதேபோல, விண்கற்கள் மோதி ஏற்படும் கிரேட்டர் எனப்படும் பெரும்பள்ளங்களுக்கு ஆரியபட்டா, ஹோமி பாபா, சி.வி.ராமன் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கல்பனா சாவ்லாவின் நினைவாகவும் ஒரு பெரும்பள்ளத்திற்கு சாவ்லா எனப் பெயரிப்பட்டுள்ளது,” எனக் கூறுகிறார் புனேவை சேர்ந்த விஞ்ஞானி.
சந்திரயான்-3 வெற்றியைப் பாராட்டும் வகையிலான பேரணியில் பங்கெடுத்திருந்த அறிவியலாளர் வெங்கடேசன், “சிவசக்தி என்ற பெயர் நாட்டு மக்கள் அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை,” என்று கூறினார்.
“நிலாவில் உள்ள பகுதிகளுக்குப் பெயர் வைக்க நடைமுறை உள்ளதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஒருவேளை இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும் இப்போது வைத்துள்ள பெயர் அனைத்து நாட்டு மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இல்லை,” என்கிறார் ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியை சேர்ந்த அறிவியலாளர் வெங்கடேசன்.
இதுபோன்ற வான்பொருட்களுக்குப் பெயரிடும்போது இந்திய பண்பாட்டின் பழங்கால வானியல் அறிஞர்களே மற்ற அனைத்து கலாசாரங்களுக்கும் பொதுவாக இருந்த பெயர்களையே சூட்டினர் என்று கூறுகிறார் வெங்கடேசன்.
மேலும், கோள்களின், வான் பொருட்களின் தன்மையை அடிப்படையாக வைத்தே ஆரியபட்டா போன்ற வானியல் அறிஞர்கள் பெயர் சூட்டினார்கள் என்று தெரிவிக்கிறார் வெங்கடேசன்.
சந்திரயான்-3 வெற்றியைப் பாராட்டும் வகையிலான பேரணியில் பங்கேற்றபோது பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சிவசக்தி என்ற பெயர் நாட்டு மக்கள் அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை,” என்று கூறினார்.
அதோடு, “இப்போது வைத்துள்ள பெயர் முற்றிலும் மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. இது அனைவருக்கும் பொதுவானதாக இல்லை,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
“சந்திரயான்-3இன் வெற்றியை சாதி, மத பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். ஆனால், அனைத்து மக்களுடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையிலான ‘இந்திய பெயரை’ பிரதமர் வைக்கவில்லை,” என்று கூறுகிறார் அறிவியலாளர் வெங்கடேசன்.
இதன்மூலம் வான் பொருட்களுக்குப் பெயரிடுவதில் லத்தீன், கிரேக்க புராணப் பெயர்கள் மட்டுமின்றி இந்தியப் பண்பாடும் இந்தியர்களின் பெயர்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது புரிகிறது.
ஆனால், “சிவசக்தி என்ற பெயர் நிலாவில் பெயர் வைப்பதற்கான சர்வதேச விதிகளுக்கும் வரையறைகளுக்கும் முற்றிலும் விரோதமானது,” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.
வேறு கோள்களில் அந்தப் பெயர்களை வைக்க அதன் விதிகள் அனுமதிக்கின்றன. நாம் மேலே பார்த்தது போல் இந்திய பண்பாட்டைக் குறிக்கும் அத்தகைய பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுவே, குறுங்கோள் ஒன்றுக்கு சிவசக்தி எனப் பெயரிட்டிருந்தால் அது அங்கீகரிக்கப்பட்டிருக்கும். ஆனால், நிலாவில் இத்தகைய பெயரை வைப்பது சர்வதேச வானியல் கழகத்தின் விதிகளுக்குப் புறம்பானது.
சர்வதேச வானியல் கழகத்தின் விதிப்படி நிலாவில் இதிகாசம், புராணம், நம்பிக்கை ஆகியவற்றின் பெயர்களை நிலாவில் வைக்கக்கூடாது. ஆகவே, “பிரதமர் வைத்த அந்தப் பெயர் விதிமுறைகளை மீறியது என்பதால், அந்தப் பெயர் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக” விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, “தற்போது இந்தியா தரையிறங்கியுள்ள பகுதிக்கு சந்திரயான் போன்ற ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ளத் தூண்டுதலாக இருந்த அப்துல் கலாம் அல்லது இஸ்ரோ வளர்ச்சியடையக் காரணமான சதீஷ் தவான், யு.ஆர்.ராவ் போன்றோரின் பெயர்கள் வைக்கப்படுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்,” எனக் கூறும் அறிவியலாளர் வெங்கடேசன் இந்தப் பெயர் மறுபரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
மேலும், விண்வெளியில் மட்டுமின்றி நிலத்திலும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் அறிவியல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதற்கு இத்தகைய அணுகுமுறையே வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இதனால் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு மோதி வைத்த சிவசக்தி என்ற பெயர் நிலைக்குமா? அதனை சர்வதேச சமூகம் ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘சிவசக்தி பெயருக்கு சர்வதேச அங்கீகாரம் தேவையில்லை’
ஆனால், இதுகுறித்துப் பேசிய பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீவாசன், “வீனஸ், ஜூபிட்டர் என்று கோள்களுக்கு கிரேக்க கடவுளின் பெயர் இருக்கும்போது , நிலாவின் ஒரு பகுதிக்கு இந்து கடவுளின் பெயர் இருக்கக்கூடாதா?” என்கிறார்.
“அப்படி வைக்கப்பட்ட போது கேள்வி எழுப்பாத இந்து விரோதிகள், இந்து கடவுள் பெயரை வைத்தவுடன் மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.
சிவசக்தி என்ற பெயரை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏற்றுக்கொள்ள வேண்டாம். நிலாவில் இதுவரை யாரும் போகாத பகுதிக்கு நாம் சென்றுள்ளோம்,” என்று கூறுகிறார்.
மேலும், “நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி இஸ்ரோவின் இந்த வெற்றியைக் கொண்டாடும்போது ஒரு குறிப்பிட்ட மத கடவுளின் பெயரை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூட்டுவது ஏற்படையதல்ல” என்று எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்டோம்.
அதற்கு, “இந்து மதத்தின் புராணப்படி சிவன் தலையில் நிலா இருப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சிவன் நிலாவை சுமந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வேறு எந்த கடவுளுக்கும் நிலாவுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் சிவனுக்கு இருக்கிறது,” என்கிறார் பேராசிரியர் இராம ஸ்ரீவாசன்.
ஆகையால்தான் சிவசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. நிலாவுடனான புராணத் தொடர்பை வைத்து பிரதமர் இந்தப் பெயரை வைத்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.