;
Athirady Tamil News

வெசிலி ஆர்க்கிபோவ்: மூன்றாம் உலகப்போரை தடுத்த இவர் யார்? சோவியத் அணுஆயுத நீர்மூழ்கியில் என்ன செய்தார்? !!

0

அது அக்டோபர் 27, 1962. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தின் விளிம்பில் உலகம் இருந்தது.

அமெரிக்க கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், கியூபாவில் அமெரிக்காவை நோக்கி சோவியத் ஒன்றியம் நிறுத்திருந்த அணு ஆயுத ஏவுகணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அமெரிக்கா ஒரு நெருக்கடியை உருவாக்கியிருந்தது. அப்போது, இரு நாடுகளின் இராணுவக் கப்பல்களும் தங்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க ஒரு மூலோபாய சண்டைக்குத் தயாராக படைகளை வைத்திருந்தன. இதனால் உலகளாவிய மோதலை உருவாக்கும் ஆபத்தும் மிக அதிகமாக இருந்தது.

உளவு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக கியூபா கடற்பகுதியைச் சுற்றி ரோந்து செல்வது ஒன்று தான் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்ட பணியாக இருந்தது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் சில அணு ஆயுதங்களைக் கொண்ட டார்பிடோக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தன.

சோவியத் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றின் உள்ளே ஒரு அணு ஆயுத மோதலைத் தூண்டக்கூடிய ஒரு நேரம் வந்தது. அந்த நாட்களில், மூன்று தளபதிகள் தங்கள் மீது நடக்கும் ஒரு அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள, அணு டார்பிடோவைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.

அவர்களில் இரு தளபதிகள் அந்தத் தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் மூன்றாவது தளபதி அந்த முடிவை ஏற்க மறுத்துவிட்டார்.

அவர் தான் வெசிலி அலெக்ஸாண்ட்ரோவிச் ஆர்க்கிபோவ்.

“அந்த மனிதன் உண்மையில் ஒரு அணுசக்தி பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அதைச் செய்தார். ஏனென்றால் அவர் ரஷ்யாவால் நிறுவப்பட்ட நெறிமுறையை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றினார்,” என “தி மிட்நைட்” புத்தகத்தின் ஆசிரியர் எட்வர்ட் வில்சன் எழுதுகிறார். அவர் பிபிசி முண்டோவிடம் ஆர்க்கிபோவின் கதையை விவரித்தார்.

சோவியத் கடற்படை நெறிமுறையின்படி, அணு ஆயுத வெடிகுண்டுகளை வீசுவதற்கு மூன்று கடற்படைத் தளபதிகளின் ஏகமனதான ஒப்புதல் தேவைப்பட்டது.

கியூபாவில் ரஷ்யா அமைத்த அணு ஆயுத ஏவுகணைத் தளத்தைப் பற்றி அக்டோபர் 22, 1962 அன்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி உரையாற்றினார்.

“இருப்பினும் அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறுவதைத் தடுக்கும் பல காரணிகள் இருந்தன. மேலும் ஆர்க்கிபோவ் அவருக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது,” என்று வில்சன் கூறுகிறார்.

1998 இல் அவரது மறைவுக்குப் பிறகு, உலகின் பெரும்பாலான பகுதிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2018 இல் கூட, ஒரு அமெரிக்க அமைப்பு அவருக்கு மரணத்திற்குப் பின், அணுசக்தி மோதலைத் தடுப்பதில் அவருடைய செயல்களுக்காக “வாழ்க்கையின் எதிர்காலம்” என்ற விருதை வழங்க முடிவு செய்தது.

அக்டோபர் 22, 1962 அன்று, மீண்டும் ஒரு நெருக்கடி உலகில் ஏற்பட்டது. அன்று, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, கியூபாவில் சோவியத் ரஷ்ய அரசின் அணு ஆயுத ஏவுதளம் இருந்ததைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.

அந்தத் தளம் அப்போது பெரிய அளவில் செயல்படாவிட்டாலும், எதிர்காலத்தில் எந்நேரமும் ஒரு அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராக இருக்கலாம் என அஞ்சப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து வெறும் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இந்த அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை தாக்கி சில நிமிடங்களில் அழித்துவிடும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன.

அதிபர் கென்னடி வெளியிட்ட அதே செய்தியில் பாதுகாப்பு நடவடிக்கைகள், ராணுவ வீரர்களைத் தயார்படுத்துதல் மற்றும் கப்பல்களை வரிசைப்படுத்துதல் உள்ளிட்ட அமெரிக்க அரசின் திட்டங்களையும் அறிவித்தார். அதன்பிறகு அந்தப் போர்க்கப்பல்கள் அரிதாகவே காணப்பட்டன. இதில் கியூபாவைச் சுற்றி இராணுவத்தைக் கொண்டு முற்றுகையிடும் திட்டமும் இடம்பெற்றிருந்தது. அதற்கேற்றவாறு கடற்படை நிலைநிறுத்தப்பட்டது.

சோவியத் ஒன்றிய ஏவுதளத்தின் கட்டுமானத்தைத் தொடர மேலும் பொருட்கள் வருவதைத் தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

இருப்பினும், இதற்கெல்லாம் சோவியத் ஒன்றியம் துளியும் அஞ்சவில்லை. அமெரிக்க ராணுவப் படைகளை எதிர்க்கும் வகையில் தளபதிகள் தங்களது முழு இராணுவத்தையும், அப்பகுதியில் இருந்த சோவியத் கப்பல்களையும் விழிப்புடன் வைத்திருந்தனர்.

அக்டோபர் 27 அன்று, அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ரஷ்ய தளபதி வாடிம் ஓர்லோ தெரிவித்த தகவல்களின்படி, அணுகுண்டுகளை வீசுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அந்த கப்பலின் உள்ளே இருந்த சூழ்நிலை அவ்வளவு மோசமாக இருந்தது எனக் கூற முடியாது.

பூமியின் வடக்கு பகுதியில் குளிர்ந்த நீரில் செல்ல வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலுக்கு கரீபிய கடல் நீர் மிகவும் சூடாக இருந்தது. அதனால் குளிரூட்டும் அமைப்பு சரியாகச் செயல்படவில்லை. இது அந்த கப்பலுக்குள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தியது.

கூடுதலாக, அதற்கு முன் சில மணி நேரமாக, தளபதி வாலண்டைன் சாவிட்ஸ்கி செலுத்திய அந்த நீர்மூழ்கிக் கப்பல், அமெரிக்க கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டதால் கடற்படையின் கப்பல்களை விட அதிக வேகத்தில் பயணம் செய்தது. கப்பலுக்குள் வெப்ப நிலை உயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

“பென்டகன் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, அந்த நீர்மூழ்கிக் கப்பலை கடலின் மேற்பரப்புக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், அமெரிக்க போர்க்கப்பல் பேரழிவை ஏற்படுத்தாத வெடிகுண்டுகளை வீசத் தொடங்கியது. அந்த நேரத்தில் B-59 நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்தவர்களுக்கு போதுமான தகவல் தொடர்புகள் இல்லாததால், போர் தொடங்கிவிட்டது என்ற தோற்றத்தை அது அளித்தது,” என வில்சன் சுட்டிக்காட்டுகிறார்.

பி-59 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல் அச்சத்தின் போது, கியூபாவைச் சுற்றி ரோந்துப் பணிகளை மேற்கொண்டிடிருந்த சோவியத் கப்பல் படைப்பிரிவின் ஒரு பகுதியாகும்.

இந்தத் தாக்குதலை எதிர்கொண்ட சாவிட்ஸ்கி, கடற்படையின் மூன்று மூத்த அதிகாரிகளும் ஒரு ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்தார்.

அவர்களில் ஒருவர் துணைத் தளபதியாக செயல்பட்ட ஆர்க்கிபோவ் ஆவார். கடலின் மேற்பரப்பிலிருந்து பொழியும் வெடிகுண்டுகளால் பதற்றமடைந்த கேப்டன், அணுகுண்டுகளில் ஒன்றைப் பயன்படுத்துவதே சிறந்த வழி என்று சுட்டிக்காட்டினார்.

“இப்போதே அழித்துவிடுவோம். நாம் உயிரிழந்தாலும் பரவாயில்லை. ஆனால் அனைவரையும் மூழ்கடிப்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். நாம் சோவியத் கடற்படையின் அவமானமாக இருக்க மாட்டோம் என்று சாவிட்ஸ்கி கத்தினார்,” என்கிறார் ஆர்லோ.

“அப்போது சோவியத் ஒன்றிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கு அரசின் ஒப்புதலோ அல்லது நேரடி உத்தரவோ தேவையில்லை. மூன்று தளபதிகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்,” என்று வில்சன் கூறுகிறார்.

தளபதிகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பையும் மரியாதையையும் கொண்டிருந்த ஆர்க்கிபோவ், கேப்டனின் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

“ஆர்க்கிபோவ் மட்டும் மறுத்துவிட்டார். கட்டுப்பாட்டு அறையில் நடந்த விவாதத்தின் போது, ஆர்க்கிபோவின் மீது இருந்த மதிப்பு ஒரு முக்கிய காரணியாக இருந்தது உண்மைதான். ஒரு ஆண்டுக்கு முன்பு, அந்த இளம் அதிகாரி ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் ஓவர்லோட் செய்யப்பட்ட அதிக வெப்பமான அணு உலையைக் காப்பாற்றுவதற்காக, தன் மீதான கதிர்வீச்சைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டார்,” என்று வில்சன் கூறினார்.

சிறிது நேரம் கழித்து ஆர்க்கிபோவ் தெரிவித்த கருத்துகளில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஏன் பதில் தாக்குதல் நடத்தவில்லை என்பதற்கான காரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் ராணுவ தளத்தை விட்டு வெளியேறிய போது “பதற்றமான சூழ்நிலை” இருந்த போதிலும், இராணுவத் தாக்குதலுக்கான ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்று தான் வாதிட்டதாக அவர் கூறினார்.

“அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட அதிக வெப்பம் மற்றும் அமெரிக்க கடற்படையின் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், கேப்டனை அவர் அமைதிப்படுத்தியதற்கு நன்றி. உலகப் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளுடன் மூன்றாம் உலகப் போர் தொடங்காமல் இருந்ததற்கு இதுவே காரணம்,” என்று வில்சன் குறிப்பிடுகிறார்.

கியூபாவில் அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை ஏவுவதற்கான தளம் கட்டப்பட்டதை அமெரிக்க உளவுத் துறை படம்பிடித்தது.

அக்டோபர் 28 அதிகாலையில், துருக்கியிலிருந்த அமெரிக்க அணுசக்தி தளத்தை அகற்றுவதற்கும், அதற்கு பதிலாக, கியூபாவில் இருந்த சோவியத் தளத்தை அகற்றுவதற்கு இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டின.

பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்கள் சொந்த துறைமுகங்களுக்கு அமைதியாகத் திரும்பின. போர் நடந்து அதில் வெற்றி பெற்ற பின் இப்படி திரும்பியிருந்தால் அந்தக் கப்பல்கள் ஹீரோக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும். ஆனால், போர் நடக்காத காரணத்தால் அது போன்ற வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.

அமெரிக்க பொது ஒளிபரப்பு நிறுவனம் (பிபிஎஸ்) இது குறித்து ஆவணப்படுத்திய போது பேசிய ஆர்க்கிபோவின் மனைவி ஓல்கா, பதற்றத்தின் உச்சத்தில் அவர் ஒரு முடிவை எடுத்தபோது, அவரது மேலதிகாரிகள் எவ்வாறு அவர்களை நிலைநாட்ட முயன்றார்கள் என்பதில் தனது கணவர் மிகவும் ஏமாற்றமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

இது குறித்துப் பேசிய மேலும் பலர், குறிப்பாக மாஸ்கோவில் உள்ள மூத்த அதிகாரிகளில் ஒருவர், நீர்மூழ்கிக் கப்பல் படைத் தளபதிகள் வெற்றியின்றி திரும்பியதை விட “அவர்கள் அங்கேயே இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்று கூறினார்.

பின்னர் சிறிது காலம் கழித்து தனது இராணுவ வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஆர்க்கிபோவ், 1998 இல் தனது 72வது வயதில் தனக்கான எந்த அங்கீகாரத்தையும் பெறாமல் உயிரிழந்தார்.

2000 ஆம் ஆண்டில், அதிகாரி வாடிம் ஓர்லோவ் நீர்மூழ்கிக் கப்பலுக்குள் என்ன நடந்தது என்பதை விவரித்தார். ஆர்க்கிபோவ் எடுத்த முடிவுகளின் காரணமாகவே அந்த அணுகுண்டுகள் வீசப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர் ஆர்க்கிபோவின் பங்களிப்பு எந்த விதத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

“உண்மையில் அணுஆயுதப் போர் வெடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகள் சோவியத் யூனியனிடம் இல்லாததால் ஐரோப்பா மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரிகிறது,” என்று வில்சன் குறிப்பிடுகிறார்.

“ஆர்க்கிபோவின் பங்கு நினைவுச்சின்னமானது என்று நான் நினைக்கிறேன், அணு ஆயுதப் போரை நிறுத்தியதற்காக நீங்கள் நிச்சயமாக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.