;
Athirady Tamil News

பிரிகோஜின்: புதின் நட்பால் ‘வாக்னர்’ ராணுவம் கண்ட இவர், பகையானதும் பலியான மர்மம் என்ன?!!

0

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது.

அரசு பாதுகாப்பு ஏஜென்ஸிகள், தலைமறைவு உலகத்தின் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த காலப்பகுதியில் உருவான, ஒருவரை ஒருவர் சார்ந்த உறவு இது. அதன் முடிவு மோசமாகவே இருக்கும் என்பது கண்கூடு.

வாக்னர் குழுமம் சில தசாப்தங்களுக்குள் ரஷ்யாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாக மாறியது. புதின் அரசு தொடர்வது, யுக்ரேன் போரில் பிரிகோஜினின் வெற்றியை சார்ந்ததாக ஆகிவிட்டதாக மேலும் சிலர் கருதினர்.

இப்போது அரசியல் செல்வாக்கிற்கான எல்லா போட்டிகளையும் முடிவுக்கு கொண்டுவர கிரெம்ளின் விரும்புகிறது என்றே தோன்றுகிறது.

1990களின் முற்பகுதியில் எவ்கேனி பிரிகோஜின் முதல் முறையாக விளாதிமிர் புதினை சந்தித்தார். அவர்களின் முதல் சந்திப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் பிரிகோஜின் சிறையில் இருந்து அப்போதுதான் விடுவிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. மறுபுறம் சோவியத் பாதுகாப்பு சேவையான கேஜிபிக்காக கிழக்கு ஜெர்மனியில் ஒரு பணியை முடித்துவிட்டு புதின் திரும்பி வந்திருந்தார். அரசியலில் நுழைய அவர் வழியை தேடிக்கொண்டிருந்தார்.

1990 களில் ரஷ்யாவில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை, இந்த சந்திப்பின் பின்னணியில் இருந்தது. 1991 இல்

சோவியத் யூனியன் பல நாடுகளாகப்பிரிந்த நேரத்தில், தலைமறைவு குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. அவர்களின் கைகளுக்கு நிறைய அதிகாரம் கிடைத்தது.

வரலாற்று ரீதியாக சோவியத் யூனியனில் பாதுகாப்பு சேவைகள், குற்றவாளிகளின் உதவியை பெற்றன. பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு பணிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்தன.

குற்றவாளிகள் இந்த வகையான ஆதரவால் பயனடைவார்கள். இதனால் அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

எவ்கேனி பிரிகோஜினும், விளாதிமிர் புதினும், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமும், பெரும்பாலான மக்களின் கலாச்சார தலைநகருமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்தவர்கள். இங்கே ஹெர்மிடேஜ் கலை அருங்காட்சியகம் மற்றும் இம்பீரியல் குளிர்கால அரண்மனை உள்ளது.

இந்த நகரம் ‘ரஷ்யாவின் குற்ற தலைநகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது, அங்கு சிறிய திருடர்கள் முதல் பெரிய குற்றமுதலைகள் வரை பல சக்திவாய்ந்த கிரிமினல் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எவ்கேனி பிரிகோஜின் இதற்கு விதிவிலக்கல்ல. 1970 களில் அவர் திருட்டு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் எச்சரிக்கையைப் பெற்றார்.

1981 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் பிடிபட்டார். அவர் மீதான கொள்ளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கொடூரமான குற்றச் சம்பவத்தின் சூழ்நிலைகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன: பிரிகோஜினும் மற்ற இரண்டு கூட்டாளிகளும் தெருவில் ஒரு பெண்ணைத் தாக்கி, கழுத்தை நெரிக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணின் குளிர்கால காலணிகள் மற்றும் காதணிகளுடன் தப்பிச் சென்றனர்.

எதிர்காலத்தில் வாக்னர் குழுமத்தின் தலைவராக வரவிருக்கும் பிரிகோஜின் 1990 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வெளியே வந்தபோது இருந்த உலகம் அவர் சிறைக்குச் சென்றபோது இருந்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

சீர்திருத்தவாதி மிக்கேல் கோர்பச்சேவ், பழைய சோவியத் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவின் இடத்திற்கு வந்திருந்தார். பெரிஸ்ட்ரோய் சீர்திருத்தம் முழு வீச்சில் இருந்தது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டிருந்தது.

1990 களின் நடுப்பகுதியில் எவ்கேனி பிரிகோஜின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ‘தி ஓல்ட் கஸ்டம் ஹவுஸ்’ என்ற உணவகத்தைத் திறந்தார். குற்ற கும்பல்களின் தலைவர்கள் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மேயர் அனடோலி சோப்சாக் ஆகியோரும் இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள்.

அந்த நேரத்தில் புதினுக்கு 40 வயது. அவர் சோப்சாக்கின் உதவியாளராக பணியாற்றினார்.

ஆனால் பிரிகோஜினுக்கு வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமாக இருந்தது. அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகங்களின் சங்கிலியைத் தொடங்கினார். அங்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்களைத் தவிர, அரசியல்வாதிகளும் வருவார்கள்.

2002 இல் பிரிகோஜின், விளாதிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் இரவு உணவு பரிமாறுவது போன்ற ஒரு புகைப்படம் உள்ளது. அந்த நேரத்தில் அவரது செல்லப்பெயர் ‘புதினின் சமையல்காரர்’ (Putin’s chef).

கேஜிபியில் பணியாற்றியவரும், சந்தேக புத்தி கொண்டவருமான புதின் போன்ற ஒருவருக்கு தனது உணவின் பாதுகாப்பை உறுதிசெய்ய சொந்த சமையல்காரர் இருப்பது இன்றியமையாததாக இருந்தது.

2000 களின் முற்பகுதியில், விளாதிமிர் புதின் கிரெம்ளின் சென்றடைந்தார். ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை, தனது கட்டுப்பாட்டை மீண்டும் பெறத் தொடங்கியது.

2000 களின் நடுப்பகுதியில் இருந்து எவ்கேனி பிரிகோஜின், கிரெம்ளினுக்காக பல்வேறு பணிகளை செய்யத் தொடங்கினார். குறிப்பாக பாதுகாப்பு சேவைகளின் அதிகார எல்லைக்கு வெளியே உள்ள பணிகள் இதில் அடங்கும்.

ரஷ்யாவிலும் வெளிநாட்டிலும் தவறான தகவல்களை பரப்புவதையே முக்கிய பணியாகக்கொண்ட ஊடக நிறுவனத்தை அவர் நிறுவினார்.

இந்த ஊடக இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட கதைகள், எந்த ஒரு அரசு பிரச்சார அமைப்பும் பரப்பத்துணியாத அளவிற்கு அத்தனை சிறப்பாக இருந்தன.

ஆனால் சமூக ஊடகங்களின் சகாப்தம் வந்து அதன் செல்வாக்கு அதிகரித்தபோது, பிரிகோஜின் தனது சொந்த ‘ட்ரோல் தொழிற்சாலையை’ நிறுவினார்.

உண்மை என்று எதுவும் இல்லை, அதைப் பின்தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற நம்பிக்கையை ரஷ்யர்களிடையே பரப்ப இந்த தொழிற்சாலை உதவியது என்று பல வர்ணனையாளர்கள் கருதுகின்றனர்.

2013-14 ஆம் ஆண்டில், யுக்ரேனிய புரட்சி மற்றும் க்ரைமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, தனியார் ராணுவ அமைப்பான ’வாக்னர் குழுமம்’ முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தது.

வாக்னர் குழுமம், க்ரைமியா மற்றும் கிழக்கு யுக்ரேனில், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை ஆதரித்தது.

அந்த நேரத்தில் கிரெம்ளினுக்கு யுக்ரேனை முழுமையாக ஆக்கிரமிக்கும் தைரியம் இல்லை. மாறாக அது சிரியாவில் ஒரு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

சிரியாவில் ரஷ்யாவின் தலையீட்டின் நோக்கம், கிழக்கு யுக்ரேனில் உள்ள டான்பாஸில் நடந்த போரில் இருந்து கவனத்தை திசை திருப்புவதாகும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நேரத்தில்தான் பிரிகோஜினின் நெருங்கிய கூட்டாளியான டிமித்ரி உத்திகன் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். அவர் வாக்னர் குழுமத்தின் கமாண்டர் ஆனார். அவர் தீவிர வலதுசாரி கருத்துக்கள், மிருகத்தனம் மற்றும் இரக்கமற்ற குணத்திற்கு பெயர் பெற்றவர்.

நோவோசிபிர்ஸ்கில் உள்ள வாக்னர் குழுமத்தின் உள்ளூர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு தற்காலிக நினைவுச்சின்னம். எவ்கேனி பிரிகோஜின் (இடது) மற்றும் டிமித்ரி உத்திகனின் புகைப்படம்.

எவ்கேனி பிரிகோஜினும், அவரது தனிப்பட்ட ராணுவமும் புதினின் அதிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

ஆனால் பிரிகோஜினுடன் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அரசு 2022 வசந்த காலம் வரை தொடர்ந்து கூறி வந்தது.

தனியார் ராணுவத்தை வைத்திருப்பது ரஷ்ய சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்னரின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தொடர்ந்து கூறிவந்தார்.

சில தனியார் தொழிலதிபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பது மட்டுமே கிரெம்ளினுக்குத் தெரியும் என்று அவர் கூறிவந்தார்.

ஆனால் மறுபுறம் வாக்னர் ரகசியமாக ஈடுபட்டிருந்த யுக்ரேன் மற்றும் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவின் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

2022 கோடையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ஆயுதமேந்திய தொழிலதிபர்கள் குழு யுக்ரேனில் போரில் ஈடுபட்டதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.

சில வாரங்களுக்குள் எவ்கேனி பிரிகோஜின், ரஷ்ய சிறைகளுக்குச் சென்று போரிடுவதற்காக கைதிகளை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கினார்.

2022 இலையுதிர்காலத்தில், அதிகாரப்பூர்வ கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ். “நடப்பதை பார்த்து அவரது இதயம் வலிக்கிறது” மற்றும் “பெரிய பங்களிப்பை வழங்குபவர்” என்று பிரிகோஜின் பற்றி விவரித்தார்.

2022 நவம்பரில் எவ்கேனி பிரிகோஜின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ‘வாக்னர் மையத்தை’ திறந்தார், அதே நேரத்தில் ரஷ்ய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மீதான அவரது விமர்சனம் கூர்மையாக ஆனது.

தெற்கு யுக்ரேன் மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியபோது, பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதான பிரிகோஜினின் விமர்சனம் உச்சத்தை எட்டியது.

போரில் தனியார் ராணுவத்தின் பங்களிப்பை ஒப்புக்கொள்ள ராணுவ தளபதி மறுப்பதாக வாக்னர் குழமத்தின் தலைவர் புகார் கூறினார்.

கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்மூத் நகரில் நடந்த சண்டையின் போது வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் சீஃப் ஆஃப் ஜெனரல் ஸ்டாஃப் வலேரி ஜெராசிமோவ் மீது அவர் குற்றம் சாட்டினார்.

அதிகரித்து வந்த மோதல் குறித்து கிரெம்ளின் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் எல்லா தனியார் ராணுவ குழுக்களும் ஒரு கமாண்டின் கீழ் வர வேண்டும் மற்றும் ராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று ஜூன் மாதத் தொடக்கத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கோரியது. பிரிகோஜின் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ரஷ்யப் படைகள் வாக்னரின் நிலைகளை குறிவைத்ததாக, ஜூன் 23 ஆம் தேதி அதிகாலையில் எவ்கேனி பிரிகோஜின் குற்றம் சாட்டியபோது மோதல் உச்சத்தை எட்டியது. இருப்பினும் அத்தகைய தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

மாஸ்கோவை நோக்கி ‘நீதியின் அணிவகுப்பு’ நடத்தப்படும் என்று பிரிகோஜின் அறிவித்தார்.

இவை பிரிகோஜினின் விரக்தியின் அறிகுறிகள் என்றும் ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான தனது மோதல் குறித்து அதிபர் புதினின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி என்றும் பிபிசி மற்றும் பிற ஊடகங்கள் பேசிய வட்டாரங்கள் தெரிவித்தன.

“தனது சுயஉரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப்பட்டார்” என்று எவ்கேனி பிரிகோஜினை நன்கு அறிந்த ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

வாக்னர் குழுமம் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. சுமார் 15 ரஷ்ய வீரர்களைக் கொன்றது.

பிரிகோஜின் இந்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டபோது ரஷ்ய பாதுகாப்பு சேவை FSB அவருக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கை ஆரம்பித்தது. அதே நேரத்தில் அதிபர் புதின், பிரிகோஜினின் பெயரைக்குறிப்பிடாமல் அவரை’தேச துரோகி’ என்றும் ‘நாட்டை முதுகில் குத்தியவர்’ என்றும் அழைத்தார். மேலும் எல்லா கிளர்ச்சியாளர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

ஜூன் 24 ஆம் தேதி மாலை வாக்னர் குழுமத்தின் அணிவகுப்பை எவ்கேனி பிரிகோஜின் நிறுத்தியபோது நிலைமை திடீரென தணிந்தது.

ஜூன் 29 ஆம் தேதி அதிபர் புதின், பிரிகோஜின் மற்றும் பிற கமாண்டர்களை சந்தித்தார். ரஷ்ய ராணுவ தளபதியின் கீழ் பணியாற்ற வாக்னர் குழுவை தான் சம்மதிக்க வைத்திருப்பதாக அதிபர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்ற ஒப்புக்கொண்டதை பிரிகோஜின் மறுத்தார்.

வாக்னர் குழுமம் ஆரம்பத்தில் இருந்தே ரஷ்ய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுவந்ததாக அதன்பிறகு விளாதிமிர் புதின் திடீரென்று அறிவித்தார். இருப்பினும் தனியார் ராணுவத்துடன் எந்தவிதமான தொடர்பையும் பல ஆண்டுகளாக கிரெம்ளின் மறுத்து வந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பிரிகோஜின் காணப்பட்டார் என்று ஜூலை பிற்பகுதியில் வெளியான சில தகவல்கள் தெரிவித்தன.

பல ஆப்பிரிக்க நாடுகளில் வாக்னர் குழு செயல்பாடுகளின் வரலாற்றை கருத்தில் கொண்ட பல வல்லுநர்கள், ஆப்பிரிக்க கண்டத்திலும் பிரிகோஜின் தனது கவனத்தைச்செலுத்துவார் என்று கருதினர்.

டுவெர் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் எடுக்கப்பட்ட அவரது வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது.

பிரிகோஜின் தொப்பி அணிந்து மைதானத்தில் நின்றபடி “ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கய்தா மற்றும் பிற கொள்ளையர்களின் இதயங்களில் கடவுள் பயத்தை ஏற்படுத்திய பிறகு நான் இங்கே இருக்கிறேன்” என்று கூறுவதை இந்த வீடியோ காட்டுகிறது.

இதுவே அவரது கடைசி பொது உரை என்று நம்பப்படுகிறது.

பிரிகோஜினின் கதை ரஷ்ய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகளுடன் பொருந்துகிறது. கிரெம்ளினின் மிகக் கொடூரமான கொள்கைகளை அமல்படுத்தியவர்கள் பின்னர் தண்டிக்கப்பட்டு, அழிக்கப்பட்டனர் என்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.