செவ்வாயில் ஒரு நாளின் நீளம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து கொண்டே வருவது ஏன்?!!
சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் அதன் அச்சில் சூழலும் வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை (InSight Lander) அனுப்பியிருந்தது. இந்த லேண்டர் கடந்த 2018ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், இன்சைட் லேண்டர் சேகரித்த தரவை நாசா நிபுணர்கள் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
இந்த பகுப்பாய்வில், வேகமாக சுழல்வதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி விநாடி அளவு குறைந்து வருவதை அவர்கள் கண்டறிந்தனர்.
சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை நிபுணர் குழுவினரால் கண்டறிய முடியவில்லை. இதற்கு பதிலாக ஒரு கோட்பாடு அவர்களால் முன்வைக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் நிறை (Mass), அதன் மேற்பரப்பில் என்ன நடக்கிறது என்பன உள்ளிட்ட கிரகத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றத்தை சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பனிக்கட்டிகள் நிறைந்த துருவப்பகுதிகளில் பனிக்கட்டி படிவதாலும், பனிக்கட்டி புதைவால் நிலப்பரப்பு உயர்ந்து வருவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இன்சைட் தொகுதியால் பதிவுசெய்யப்பட்டதைப் போல துல்லியமான அளவீடு எதுவும் இல்லை என்பதால் சுழற்சி மாற்றங்களை இதுவரை கண்டறிய முடியாமல் இருந்தது.
“இவ்வளவு துல்லியத்துடன் சமீபத்திய அளவீட்டை பெறுவது மிகவும் அருமையாக உள்ளது ” என்று இன்சைட்டின் முதன்மை ஆய்வாளரான புரூஸ் பேனர்ட் கூறுகிறார்.
“செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் நான் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறேன். தற்போது தெரியவந்துள்ளவை போன்ற முடிவுகள் பல ஆண்டுகளின் உழைப்பை பயனுள்ளதாக்குகின்றன.” என்றும் குறிப்பிடுகிறார்.
இன்சைட் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியபோது எப்படி இருந்தது என்பதை காட்டும் விளக்கப்படம்
இத்தகைய அளவீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன.
செவ்வாய் கிரகத்தின் தன்மையைப் பற்றி விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்ள உதவும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இன்சைட் லேண்டர் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த பயணத்தின்போது, நில அதிர்வை அளவிட பயன்படும் நிலநடுக்கமானி (seismometer), வெப்பத்தை ஆய்வு செய்யும் கருவி மற்றும் ரேடியோ அலைகளை அளவிடும் கருவி என மூன்று முக்கிய கருவிகளையும் இன்சைட் லேண்டர் தன்னுடம் எடுத்து சென்றது. இவை மொத்தமாக சேர்ந்து சுழற்சி மற்றும் உள் கட்டமைப்பு பரிசோதனை (RISE) என்று அழைக்கப்பட்டன.
செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கத்தின்போதும் விண்கற்கள் விழுவதால் ஏற்படும் தாக்கத்தின் போதும் உண்டாகும் நில அதிர்வு அலைகளை கண்டறிவது நிலநடுக்கமாணியின் பணியாகும்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள வெப்பநிலையை அளவிடுவது வெப்ப ஆய்வு செய்யும் கருவியின் வேலை. இதற்காக அது சுமார் 5 மீட்டர் ஆழத்திற்கு குழியை தோண்டி ஆய்வு செய்தது. இதற்கு முன்பு துளையிடப்பட்டதை விட இது ஆழமானதாகும்.
மூன்றாவது கருவியான ரேடியோ அலைகளை அளவிடும் கருவி, சூரியனை செவ்வாய் கிரகம் சுற்றிவரும் விதத்தை தீர்மானிக்க இன்சைட் லேண்டரின் இருப்பிடத்தை கண்காணித்தது.
இந்த மூன்று கருவிகளும் சேகரித்த தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, செவ்வாய் கிரகத்தின் சுழற்சியின் வேகத்தில் ஏற்பட்டுள்ள வேறுபாட்டை கண்டுபிடித்தனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து உறுதியான தகவல் எதையும் விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது, சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கான சாத்திய கூறுகள் குறித்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பெல்ஜியத்தின் ராயல் அப்சர்வேட்டரியின் முதன்மை ஆசிரியரும் RISE முதன்மை ஆய்வாளருமான செபாஸ்டின் லு மேஸ்ட்ரே கூறுகையில், “செவ்வாய் கிரகத்தின் ஒரு வருடத்தில் ஏற்பட்டுள்ள சில சென்டிமீட்டர்கள் மாறுபாடுகளை மட்டுமே நாங்கள் தேடி வருகிறோம்” என்றார்.
எனினும் இந்த மாறுபாடுகளை கண்டறிய நீண்ட நாட்கள் ஆகும், மேலும் நிறைய தரவுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.