கடன்சுமையிலிருந்த இந்தியருக்கு அடித்த ஜாக்பொட் !!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவர் எமிரேட்ஸ் டிராவின் முதல் பரிசை வென்று அசத்தியதுடன் பெரும் கடன் சுமையிலிருந்தும் மீண்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த நசீம்( 54 ) என்பவருக்கே இந்த ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நசீம் அங்குள்ள சுப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். நசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் தான் சம்பாதித்த மொத்தத்தையும் இழந்தார். அந்த இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரடியாக இருந்தது.
அதில் இருந்து நசீமாலும் அவரது குடும்பத்தினராலும் மீண்டுவர முடியவில்லை. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைக்காக சென்ற நசீம், பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். மும்பையில் வீட்டுக்கடனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கிய நசீம் அதற்கான கடன் தொகையை மாதா மாதம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் எமிரேட்ஸ் டிரா FAST5 விளையாட்டில் பங்கேற்றார் நசீம். இதில் அவர் 50,000 திர்ஹம்களை பரிசாக வென்றார் இந்திய ரூபாய் மதிப்பில் 11,23,704 ரூபாய் ஆகும். இந்த பரிசு தொகையை தான் வென்றிருப்பது தனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டுள்ள நசீம், இந்த பணத்தின் மூலம் தனது வீட்டுக்கடனை அடைத்து விடுவேன் என தெரிவித்துள்ளார். இந்த பரிசு தனது தோள்களில் இருந்த பெரிய சுமையை இறக்கி வைக்க உதவியாக உள்ளது என்றும், தனது வயதான தாயுடன் சேர்ந்து வசிக்க தன்னை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் UAE குடிமகனான தொழில் அதிபர் மஜித் சுல்தான் இப்ராஹிம், 25,000 திர்ஹம்களை வென்றுள்ளார். இந்திய மதிப்பில் 561,852 ரூபாய் ஆகும்.