தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் நைஜர் இராணுவ அரசு !!
நைஜர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ள நிலையில் அனைத்து ஆயுதப் படையினரும் அதிகபட்ச முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள் பணித்துள்ளனர்.
எனினும் இராணுவ நடவடிக்கைகள் எதனையும் உடனடியாக முன்னெடுக்கப் போவதில்லை என மேற்கு ஆபிரிக்காவின் பொருளாதார சமூகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
நைஜரில் கடந்த ஜுலை மாதம் 26 ஆம் திகதி ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்ட இராணுவத் தலைவர்களுடன் எக்கோவாஸ் எனப்படும் மேற்கு ஆபிரிக்காவின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த இராஜதந்திர முயற்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் அந்நாட்டில் அரசியலமைப்பை நிலைநிறுத்தும் வகையில் படையினரை அனுப்புவதற்கும் தயாராக இருப்பதாக எக்கோவாஸ் அமைப்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் எந்தவொரு தாக்குதலின் போதும் படைகள் போதுமான அளவில் பதிலளிக்கும் வகையில் உயர்ந்த தயார்நிலையில் இருக்குமாறு இராணுவ ஆட்சியாளர்களின் பாதுகாப்பு தலைமை அதிகாரியால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பிரதேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதை உணர முடிகின்றது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவலை எக்கோவாஸ் அமைப்பு நிராகரித்துள்ளதுடன் இராஜதந்திர முயற்சிகளுக்கு இடமளிக்கும் வகையில் இராணுவ தலையீட்டை தாமதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
எனினும் இராணுவ தலையீட்டை மேற்கொள்வதற்கான தெரிவு தற்போதும் உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.