சிறு தொழில்களை பாதுகாக்க ஒரே விதமான ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது எம்.பி. தொகுதியான வயநாட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தார். செல்லும் வழியில் அவர் ஊட்டியில் இயங்கி வரும் சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் நிறுவனத்தின் தயாரிப்புகளை சுவைத்ததுடன், அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடி, இணைந்து இனிப்பு தயாரிக்கவும் செய்தார். 60-க்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு, ஒரு தம்பதி நடத்தி வரும் இந்த நிறுவனத்தை அவர் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோவை நேற்று அவர் வெளியிட்டு இருந்தார். அத்துடன் இதுபோன்ற சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை பாதுகாக்க ஜி.எஸ்.டி.யை ஒரே விகிதமாக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:- சமீபத்தில் வயநாடு செல்லும் வழியில், ஊட்டியின் மிகவும் பிரபலமான சாக்லெட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு செல்லும் மகிழ்ச்சியான அனுபவம் எனக்கு கிடைத்தது.
இந்த சிறு வணிகத்தின் பின்னணியில் உள்ள தம்பதியினரின் தொழில் முனைவோர் உணர்வு ஊக்கம் அளிக்கிறது. 70 பெண்களைக் கொண்ட இந்த அர்ப்பணிப்பு குழு நான் ருசித்த மிகவும் சுவையான இனிப்புகளில் சிலவற்றை உருவாக்குகிறது. எனினும் நாடு முழுவதிலும் உள்ள எண்ணற்ற பிற சிறு, குறு, நடுத்தர தொழில்களை போல, இந்த நிறுவனமும் கப்பார் சிங் வரியால் (ஜி.எஸ்.டி.) அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் நான் இங்கு சந்தித்த பெண்களைப் போன்ற கடின உழைப்பாளிகள்தான் இந்தியாவின் வளர்ச்சியைத் தக்க வைக்கின்றனர். தொழில்துறை மையங்களை உருவாக்குவதும், ஒரே ஜி.எஸ்.டி விகிதத்தை அமல்படுத்துவதுமே இந்தியாவின் வளர்ச்சி எந்திரத்தை இயக்கும் இந்த நிறுவனங்களை பாதுகாப்பதற்கான இன்றியமையாத நடவடிக்கைகள் ஆகும்.
பெண்கள் தலைமையிலான இது போன்ற குழுக்கள் அனைத்து ஆதரவுக்கும் தகுதியானவர்கள். இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், ‘இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் ராகுல் காந்தி சமீபத்தில் ஊட்டியில் பெண்களால் நடத்தப்படும் சாக்லெட் தொழிற்சாலைக்கு சென்றார். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், அவர்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொண்டார். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை சேர்ந்தவர்களின் குறைகளை இதைப்போல கேட்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தேவை’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்