தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என அமித் ஷா பகல் கனவு காண்கிறார்- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் ரவுலா ஸ்ரீதர் பதிலடி!!
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே. சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும் தெலுங்கானா மாநிலத்தில் கே. சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை வெளியேற்றி, பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி குடும்பத்தையும், பி.ஆர்.எஸ். கட்சி கல்வகுன்ட்லா குடும்பத்திற்கும் சேவையாற்றி வருகின்றன. வரவிருக்கும் தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை தழுவும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் ரவுலா ஸ்ரீதர் ரெட்டி பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என அமித் ஷா பகல் கனவு காண்கிறார். ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள். (பாஜக) இங்கு ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாது” என்றார்.