நீட் பயிற்சி மாணவர்கள் 2 பேர் அடுத்தடுத்து தற்கொலை!!
மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். தனது தாய்வழி தாத்தா, பாட்டியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது. அவீஷ்கர் தற்கொலை செய்து கொண்ட 4 மணி நேரத்தில் மற்றொரு நீட் பயிற்சி மாணவரான ஆதர்ஷ் ராஜ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். பீகாரை சேர்ந்த அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு திரும்பினார். இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். இவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே இறந்தார். 2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. கோட்டாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.