இம்ரான் கானுக்கு சிறையிலும் சொகுசு வாழ்க்கை – அறிக்கை வெளியிட்ட சிறைத்துறை ஆய்வாளர்!!!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் (70). இவர் 2018ல் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5.25 கோடி ($635000) மதிப்பிலான பரிசுப்பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க அலுவலகத்திற்கு கணக்கில் காட்ட வேண்டிய விதிமுறையை மீறி, விற்று விட்டதாக 2022ல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இவரை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து, அவர் மீது கீழமை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. இதனை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், ஆகஸ்ட் 5-ம் தேதியன்று, இம்ரான் கானை குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு அபராதத்துடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியது.
இதன் காரணமாக தீர்ப்பு வெளியான தினமே அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பாகிஸ்தானுக்கு அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சிறைத்துறை தலைமை ஆய்வாளர் மியான் ஃபரூக் நசீர், நேற்று அங்கு ஆய்வு செய்து இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “இம்ரான் கானின் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், ஃபேன், குரான் உட்பட பல புத்தகங்கள், செய்தித்தாள், ஃப்ளாஸ்க், பேரீச்சம்பழம், தேன், நறுமண பாட்டில்கள், மற்றும் சோப் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.” “மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் தரமான உணவு அவருக்கு வழங்கப்படுகிறது.
அவரது உடல் நலனை காக்கவும், அவசர உதவிக்காகவும் 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். தவிர பூஜையறை, மேற்கத்திய பாணியிலான கழிவறை, கை கழுவும் பேசின் ஆகியவையும் அவர் கேட்டதற்கு இணங்க கொடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இம்ரான் கானும் திருப்தி தெரிவித்தார்,” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இம்ரான் கான் சிறையிலேயே விஷம் வைத்து கொல்லப்படலாம் என குற்றம் சாட்டி அவர் மனைவி புஷ்ரா பீபி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.