;
Athirady Tamil News

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை ஜி20 மாநாட்டின் வரவேற்புத் திடலில் !!

0

இந்திய தலைநகர் புது டில்லியில் இடம்பெறவுள்ள ஜி -20 உச்சி மாநாட்டில் வரவேற்பு திடலில் நடராஜப் பெருமான் எழுந்தருள உள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜி -20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு நடைபெறும் இடத்தின் வரவேற்பு திடலில் 19 தொன் எடையும், 28 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான நடராஜர் சிலை வைக்கப்படவுள்ளது.

இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக திகழ இருப்பது சிறப்பான விடயமாகும்.

இந்த நடராஜர் சிலையானது எட்டு வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு வெண்கல சிலையாகும், தங்கம், வெள்ளி, ஈயம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவையே அந்த எட்டு உலோகங்களாகும்.

இந்தியாவின் தமிழகத்தில் நடராஜர் திரு நடனம் செய்யும் சபைகள் என்று ஐந்து சபைகள் இருக்கின்றன.

அவையாவன, திருவாலங்காட்டின் இரத்தினசபை, சிதம்பரத்தின் கனகசபை எனப்படும் பொற்சபை மதுரையில் ரஜதசபை எனப்படும் வெள்ளிசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்று சிவபெருமான் ஐந்து இடங்களில் நாட்டிய கோலத்தில் அங்கே காட்சி அளிக்கிறார்.

இந்த பஞ்ச சபைகளிலே மதுரையில் உள்ள வெள்ளி சபையில் மாத்திரம் சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நாட்டியம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இதே நாட்டியக் கோலத்தில்தான் இந்த குறித்த நடராஜர் சிலை வடிகமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் மோடியின் விருப்பத்தின் பேரில் சோழர்கால கலை நயத்துடன் இந்த சிலை நிறுவப்படுகிறது.

சுமார் 10 கோடி ரூபாய் செலவில் இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.