படையெடுப்பு சதியை முறியடிக்க தயாராக இருக்கவும்: ராணுவத்தை வலியுறுத்திய வடகொரிய அதிபர்!!
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.
மேலும், அமெரிக்கா- தென்கொரிய ராணுவம் இணைந்து போர் பயிற்சியை கடந்த 21-ந்தேதி தொடங்கியுள்ளது. இந்த போர் பயிற்சி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது வடகொரியாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் அடிக்கடி ஆயுத தொழிற்சாலைகளில் காணப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியெடுக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய கிம் ஜாங் உன், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா- தென்கொரியா- ஜப்பான் உச்சி மாநாட்டினை தொடர்ந்து, அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான மூலோபாய சொத்துகளை (போர்க்கப்பல் உள்பட) குவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வடகொரியா, தனது உளவு செயற்கைக்கோளை 2-வது முறையாக ஏவியது. பின்னர், இந்த முறையும் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்தது.