சிறையிலும் சொகுசு வாழ்க்கை வாழும் இம்ரான்கான் !!
பரிசாக அளிக்கப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினரும் கட்சி ஆதரவாளர்களும் தெரிவித்து வந்த நிலையிலேயே மேற்கண்ட தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பில் சிறைத்துறை தலைமை ஆய்வாளர் மியான் ஃபரூக் நசீர், இம்ரான்கான் அடைக்கப்பட்டுள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள அட்டாக் மாவட்ட சிறையில் ஆய்வு செய்து இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “இம்ரான் கானின் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், மின்விசிறி, குரான் உட்பட பல புத்தகங்கள், செய்தித்தாள், பேரீச்சம்பழம், தேன், நறுமண போத்தல்கள், மற்றும் சோப் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.”
“மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் தரமான உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது உடல் நலனை காக்கவும், அவசர உதவிக்காகவும் 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். தவிர பூஜையறை, மேற்கத்திய பாணியிலான கழிவறை, கை கழுவும் பேசின் ஆகியவையும் அவர் கேட்டதற்கு இணங்க கொடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இம்ரான் கானும் திருப்தி தெரிவித்தார்,” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.