விலங்குகள் உலகில் இயற்கை நியதிகளை வெல்லும் ‘நட்பு’ – எப்படி தெரியுமா?
நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா?
மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு உள்ளது. நமது கதைகள், பாடல்கள், உரையாடல்கள் எல்லாமே நட்பு என்ற சரடைச் சுற்றியே நெய்யப்பட்டுள்ளன.
அறிவியல்ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களைவிட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்குத் தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். எனினும், நண்பர்களாக இருப்பது மனிதர்கள் மட்டுமல்ல.
கிட்டத்தட்ட மனிதர்களைப் போல இருக்கும் சிம்பன்சிகளுக்கும் போனோபோக்களும் தங்களுக்குள் நண்பர்களை உருவாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்காது.
ஆனால், விலங்கு ராஜ்ஜியத்தில் உள்ள பறவைகள், குதிரைகள், டால்பின்கள், மீன்கள் எனப் பல்வேறு உயிரினங்களும் நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றன.
அந்த நட்புறவு மனித நட்புகளைப் போன்றே இருக்கின்றன என்பது நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயம்.
நீங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கும் உங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்.
ஒருவேளை, நீங்கள் ஒரே ஊரில் வளர்ந்திருக்கலாம், ஒரே பள்ளியில் படித்திருக்கலாம், ஒரே மாதிரியான பொழுதுபோக்குகளைக் கொண்டிருக்கலாம், அல்லது ஒரே விதமான வேலைகளில் இருக்கலாம்.
இப்படி ஒற்றுமைகள் மீதான நாட்டத்தை விஞ்ஞானிகள் “ஹோமோபிலி” என்றழைக்கின்றனர். ஆனால், இவை மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல.
குரங்குகள், வரிக்குதிரைகள், அனில், எலி போன்ற கொறித்துண்ணிகள், யானைகள், திமிங்கலங்கள் ஆகியவையும் தங்களுக்கு ஒத்த வயதில் இருக்கும் சக நண்பர்களுடன் பழகுவதையே விரும்புகின்றனர்.
இந்த முன்னுரிமை, நண்பரின் நம்பிக்கையையும் சில விஷயங்களை முன்கூட்டியே கணித்து செயல்படக்கூடிய தன்மையையும் அதிகரிக்கிறது.
சிம்பன்சிகள் மற்றும் சியாமிஸ் மகாக்கள் (குரங்கு வகை) தங்களைப் போன்ற ஒத்த குணநலன்கள் கொண்ட சக விலங்குகளுடன் மட்டுமே நட்புடன் இருக்கும்.
சிம்பன்சிகள் மற்றும் சியாமிஸ் மகாக்கள் (குரங்கு வகை) தங்களைப் போன்ற ஒத்த குணநலன்கள் கொண்ட சக விலங்குகளுடன் மட்டுமே நட்புடன் இருக்கும். (ஆம், மனிதர்களை போலவே, விலங்குகளுக்கும் தனிப்பட்ட குணநலன்கள் உள்ளன).
டால்பின்கள் தங்களைப் போலவே இரை தேடும் பிற டால்பின்களோடு நண்பர்களாக இருக்கும்.
ஹோமோபிலிக் போக்குகளில் நிறுவப்பட்ட ஓர் உண்மை என்னவென்றால் ஒத்த மரபணு கொண்டவர்கள் மீது இருக்கும் ஈர்ப்பு.
அதாவது, குடும்ப உறுப்பினர்களுக்கான முன்னுரிமை. விலங்கு ராஜ்ஜியம் முழுவதிலுமே தங்கள் உறவுகளுக்கான முன்னுரிமை இருப்பதைக் காண முடியும்.
நமது விலங்கு இணைகள், உடலியல் தொடர்பு எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு காண்பிக்கின்றன.
உறவுகளில் பிறரை புண்படுத்தாமல் இருக்கும் பண்பின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் யோசிக்கும்போது, நமக்கு நினைவுக்கு வருவது காதல் உறவில் இருப்பவர்கள். ஆனால் உடலியல் ரீதியான தொடர்பும் எந்த ஓர் உறவிலும் மிகவும் முக்கியம்.
நமது விலங்கு இணைகள், உடலியல் தொடர்பு எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு காண்பிக்கின்றன.
ஜாக்டாக்கள் (பறவை வகை) தங்கள் நண்பர்களை தங்கள் அலகுகளால் வருடி நட்பை வெளிப்படுத்துகின்றன, குரங்குகள் தங்கள் கைகளால் வருடி நட்பை வெளிப்படுத்துகின்றன.
இவை மனிதர்கள் தங்கள் நட்புணர்வை வெளிப்படுத்தும் விதத்திலிருந்து பெரிதாக மாறுபட்டவை அல்ல.
எனினும் சில விலங்குகள் இடையே நட்பை வெளிப்படுத்தும் விதம் சற்று விநோதமாக இருக்கும். வெள்ளை முக கபுசின்கள் (குரங்கு வகை) தங்கள் விரல்களால் நண்பர்களின் கண்களைக் குத்தி நட்பை வெளிப்படுத்தும்.
ஆண் கினியா பபூன்கள் (குரங்கு வகை) நண்பர்களின் பாலுறுப்புகளைத் தடவி நட்பை வெளிப்படுத்தும்.
டால்பின்களின் குரலை 740 மீட்டர் வரை கேட்க முடியும். இதன் மூலம் தொலைவில் இருந்தாலும் நண்பருடன் டால்பின்கள் நெருக்கமாக இருக்கும்.
எல்லா நட்புறவுகளிலும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
நண்பர்கள் தொலைவில் இருந்தாலும், எப்படி நட்பைத் தொடர முடியும் என்று பல உதாரணங்களை விலங்குகளில் காணமுடியும்.
டால்பின்கள் தொலைவில் இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு கூக்குரலிட்டு தங்கள் நட்பை வெளிப்படுத்திக் கொள்ளும். டால்பின்களின் குரலை 740 மீட்டர் வரை கேட்க முடியும். இதன் மூலம் தொலைவில் இருந்தாலும் நண்பருடன் டால்பின்கள் நெருக்கமாக இருக்கும்.
பாலூட்டி வகைகளைச் சேர்ந்த லெமுர், ஜப்பானிய மக்காக், பொனொபோ, சிம்பன்சி ஆகியவையும் குரல்கள் மூலம் சமூக உறவுகளைப் பராமரித்து வருகின்றன.
ஒருவரை ஒருவர் தவிர்த்து வாழும் அணுகுமுறை கொண்ட விலங்குகள் இடையிலும் நட்புறவு உருவாகலாம். உதாரணமாக வட அமெரிக்க அணில் தன் எல்லைக்குள் தன் வீட்டுக்குள் மட்டுமே இருக்கும், மற்ற அணில்களுடன் உறவாடாது.
இனச்சேர்க்கைக்கு மட்டுமே மற்ற அணில்களுடன் தொடர்பில் வரும். அப்படிப்பட்ட அணில்கள்கூட, வெகு நாட்கள் ஒன்றாக வாழ்ந்தால், தங்களுக்குள் நட்பு உருவாக்கிக் கொள்ளும்.
அதன் காரணமாக அவை நீண்ட நாட்கள் உயிர் வாழும், நிறைய குட்டிகளையும் ஈன்றெடுக்கும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
ஒரே நண்பருடன் பல காலம் இருக்கும்போது, இந்த அணில்கள் தங்கள் எல்லையைப் பாதுகாக்க நேரமும், சக்தியும் செலவு செய்வதைக் குறைத்து அதிக நேரம் இளைப்பாறுகின்றன.
உணவுத் தட்டுப்பாடு காலங்களில் தன் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழும் திமிங்கலங்களும், ஓநாய்களும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
நட்புறவு என்பது ஒரு சமூக கருத்தாக உருவானது. மனிதர்களுக்கும் சரி, பிற உயிரினங்களுக்கும் சரி அது உதவுகிறது. மனிதன் உட்பட விலங்குகள் அனைத்துமே தனக்கான கூட்டாளிகள் இருந்தால், நீண்ட நாட்கள் வாழ்கின்றன, ஆரோக்யமாக வாழ்கின்றன.
கூட்டாளிகளின் சவால்களுக்குத் துணை நிற்கின்றனர். பிரச்னை ஏற்படும் காலங்களில் உதவி புரிகின்றனர்.
வேட்டையாடும் உயிரினங்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றனர், உணவு தட்டுபாட்டின்போது உறுதுணையாக இருக்கின்றனர். காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் மரணத்தில் இருந்தும் காப்பாற்றுகின்றனர்.
சான்றாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் தன் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழும் திமிங்கலங்களும், ஓநாய்களும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஏனென்றால் நண்பர்கள் தங்கள் உணவைப் பகிர்ந்து அளிப்பார்கள், உணவு எங்கே கிடைக்கும் எனத் தகவல் தெரிவிப்பார்கள்.
இரை தேடவோ, தன்னைக் காத்துக் கொள்ளவோ முடியாத உயிர்கள் மரிப்பதே இயற்கை நியதி என்று சொல்வார்கள். இதனால்தான், காட்டு விலங்குகளில் பெரிய அளவில் காயமடையும் விலங்குகள் பெரும்பாலும் மரணத்தை தழுவிவிடும். இந்த இயற்கை நியதியையும் விலங்குகளுக்கு இடையே ஏற்படும் நட்பு வென்றுவிடுகிறது. இரை தேடவோ, தன்னைக் காத்துக் கொள்ளவோ முடியாதவாறு காயம் அடையும் போது நண்பனின் உயிரை அந்த விலங்குகள் காப்பாற்றி விடுகின்றன.
பாலூட்டி வகைகளைச் சேர்ந்த லெமுர், ஜப்பானிய மக்காக், பொனொபோ, சிம்பன்சி ஆகியவையும் குரல்கள் மூலம் சமூக உறவுகளைப் பராமரித்து வருகின்றன.
விலங்குகள் இடையிலான நட்புறவு குறித்து நாம் தெரிந்துகொள்ள இன்னும் பல விஷயங்கள் உள்ளன. சில விஞ்ஞானிகள் இதுகுறித்து மட்டுமே நமது ஆழமான புரிதலுக்காக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
கரடியால், ஓநாயால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல்களிலிருந்து நவீன மனித வாழ்க்கை விலகி வருகிறது. ஆனால், இறுதியில், நாமும் விலங்குகளுக்கு இருக்கும் அதே காரணங்களுக்காகவே நட்புறவு கொள்கிறோம். ஒருவருக்கு ஒருவர் பலன் கிடைப்பதால்தான் நட்பு கொள்கிறோம்.
அழும்போது சாய்ந்துகொள்ள தோள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உதவும் கரங்கள், பணி வாய்ப்பு குறித்து நமக்கு அக்கறையுடன் சொல்லும் தகவல் ஆகியவையாக அந்தப் பலன்கள் இருக்கலாம்.
திமிங்கலங்கள், பறவைகள், பாலூட்டிகள் நமக்கு உணர்த்துவது போல, நண்பர்கள் நமக்கு உதவியாக இருப்பார்கள். அவர்கள் இல்லாமல் நாம் வாழ்வது கடினம்.
இந்தக் கட்டுரை, The Conversation-இல் வெளியிடப்பட்டு ‘படைப்பு பொது உரிமத்தின்’ கீழ் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.