;
Athirady Tamil News

ஹிட்லர் போல நெப்போலியன் சர்வாதிகாரியா? அல்லது சீர்திருத்தவாதியா? !!

0

கிளாடியேட்டர் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரிட்லி ஸ்காட் தற்போது ஃபிரஞ்ச் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் வாழ்க்கை வரலாற்றை வைத்து நெப்போலியன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படம் தொடர்பான சில புகைப்படங்களை பகிர்ந்து படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளை ரிட்லி ஸ்காட் தொடங்கியுள்ளார்.

ஜோக்கர் திரைப்படத்தில் ஜோக்கராக நடித்திருந்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் இப்படத்தில் நெப்போலியனாக நடித்துள்ளார். திரைப்படம் குறித்து ரிட்லி ஸ்காட் பேசும்போது நெப்போலியனை ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நெப்போலியனும் அவரது மனைவி ஜோஸ்பினுக்கு இடையே இருந்த உறவை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜோஸ்பினாக வனேஸா கிர்பி நடித்துள்ளார்.

படம் வெளியாக இரண்டு மாதங்களே உள்ள நிலையில் எம்பயர் திரைப்பட இதழுக்கு ரிட்லி ஸ்காட் அளித்த பேட்டியில் சில கருத்துகளை கூறியுள்ளார்.

“நெப்போலினை அலெக்சாண்டர், ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோருடன் நான் ஒப்பிட்டு கூறுவேன். அவரின் வெற்றிக்கு பின்னால் பல்வேறு தவறுகள் உள்ளன ” என்று ரிட்லி தெரிவித்திருந்தார்.

நெப்போலியன் குறித்த இந்த விமர்சனத்துக்கு பிரான்ஸ் தரப்பில் இருந்து உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. “ ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் எதையும் உருவாக்கவில்லை. அழித்தலையே அவர்கள் தொழிலாக கொண்டிருந்தனர் ” என நொப்போலியன் அறக்கட்டளையின் இயக்குநரான பியர் பிராண்டா தி டெலிகிராப் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

நெப்போலியனால் கட்டப்பட்டவை காலம் கடந்து இன்றும் இருப்பதாக அறக்கட்டளையைச் சேர்ந்த தியரி லென்ட்ஸ் கூறுகிறார்.

“நெப்போலியன் பிரான்சையோ அல்லது ஐரோப்பாவையோ அழிக்கவில்லை. அவரது வாழ்க்கைக்கு பிறகும் அவரின் புகழ் தொடர்கிறது” என்கிறார் அவர்.

ஃபிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து ஃபிரான்சில் அரசியல் ஸ்திரமின்மை நிலவிய காலத்தில் 1799 ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக இருந்த நெப்போலியன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

புரட்சிக்கு முந்தைய நிலையிலிருந்து மிகவும் மேம்பட்ட நிலைக்கு ஃபிரான்ஸை நெப்போலியன் உயர்த்தினார் என்று அவரை கொண்டாடுபவர்கள் கூறுகின்றனர்.

நிர்வாகத்தை மையப்படுத்தியதோடு, வங்கி முறை மாற்றியமைக்கப்பட்டது, கல்வி முறையும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. நெப்போலியன் கோட் நிறுவப்பட்டு சட்ட அமைப்பு மாற்றப்பட்டதோடு பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஐரோப்பிய கண்டம் முழுவதும் எண்ணற்ற போர்களையும் அவர் நடத்தினார். தொடர்ச்சியான போர்களால் அவருடைய பேரரசு பேரரசு ஐபீரிய தீபகற்பத்திலிருந்து மாஸ்கோ வரை விரிவடைந்தது.

1812ஆம் ஆண்டு வாக்கில், பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்வீடன் மற்றும் ஒட்டோமான் பேரரசு ஆகியவை மட்டுமே ஐரோப்பாவில் நெப்போலியனின் நேரடி ஆட்சியின் கீழோ வராமல் இருந்தன.

இறுதியாக 1815 ஆம் ஆண்டு வாட்டர்லூ போரில் பிரிட்டிஷ் தலைமையிலான கூட்டணியால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார்.

நெப்போலியன் மற்றும் அவரால் நடத்தப்பட்ட போர்கள் மக்களால் மிக பெரியதாக பார்க்கப்படுகின்றன.

கார்ட்டூனிஸ்டுகளுக்கு நெப்போலியன் மீது எப்போதுமே ஒரு தனி பிரியம். ஜேன் ஆஸ்டினின் நாவல்களின் பின்னணியில் நெப்போலியன் இருக்கிறார். எடுத்துக்காட்டாக, 1813 இல் வெளியிடப்பட்ட பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸ், நெப்போலியனின் எதிர்பார்க்கப்பட்ட படையெடுப்பை முறியடிக்கும் போராளிகளை பற்றியது.

நெப்போலியனின் சவப்பெட்டியின் ஒரு பகுதி சார்லோட் ப்ரோண்டேவிடம் உள்ளது. பிரஸ்ஸல்ஸில் அவரது ஆசிரியர் இதனை சார்லோட்டிடம் வழங்கியிருக்கிறார். பல புத்தகங்களிலும் நெப்போலியன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல் நம் அனைவருக்கும் பரிட்சயமானத. இந்த நாவலை எழுதிய ஆர்தர் கோனன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்ஸ் தனது வில்லனை குறிப்பிடும்போது `குற்றங்களின் நெப்போலியன்` என்று அழைப்பது போல் வடிவமைத்திருப்பார்.

அது மட்டும் அல்ல. 1945ல் வெளியான ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘அனிமல் ஃபார்ம்’-ல் சர்வாதிகாரியாக வரும் பன்றிக்கு நெப்போலியன் என்று பெயரிடப்பட்டிருக்கும்.

எனினும் நெப்போலியனை சர்வாதிகாரி என்று அழைப்பதும் மற்ற சர்வாதிகாரிகளுடன் அவரை ஒப்பிடுவதும் நியாயமானதா?

நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் பிலிப் டுவேர் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்.

“நெப்போலியனும் ஒரு சர்வாதிகாரிதான், ஆனால் அவரை ஸ்டாலினோடும் ஹிட்லரோடும் ஒப்பிட முடியாது. இருவருமே சர்வாதிகாரமாக தங்கள் சொந்த மக்களை ஒடுக்கினர். இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.
நெப்போலியன் ஆட்சியின் வதை முகாம்கள் இல்லை

நெப்போலியனின் பேரரசு ஒரு ‘காவல் அரசு’ என்று சிலரால் கருதப்பட்டது. காரணம், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தொடர்ந்து கண்காணிப்பதற்காக ரகசிய அதிகாரங்கள் கொண்ட சிக்கலான அமைப்பை அவரது அரசு கொண்டிருந்தது என்கிறார் பிலிப்.

“ஒருசிலர் மட்டுமே நெப்போலியனின் ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். தன்னை எதிர்த்தனர் என்பதற்காக சில செய்தியாளர்களுக்கு நெப்போலியன் மரண தண்டனை விதித்தார். நெப்போலியனை யாருடனாவது ஒப்பிட வேண்டுமென்றால், லூயிஸ் XIV உடன் தான் ஒப்பிடுவேன். அவர்தான் தேவையில்லாத போர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தார்.”

தேவையானது, தேவையில்லாதது என்பது ஒருபக்கம் இருந்தாலும் நெப்போலியன் போரில் ஈடுபட்டார். அதில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். எனினும், இந்த போரில் நேரடியாகவும் போரின் விளைவாகவும் எத்தனை பொதுமக்கள் உயிர் இழந்தனர் என்பது நமக்கு தெரியாது என்றும் பிலிக் கூறுகிறார்.

நெப்போலியனை ஹிட்லர், அலெக்சாண்டர் ஆகியோருடன் ஒப்பிடுவது பொறுத்தமற்றது என்கிறார் டெலிகிராம் செய்தியாளரும் ஃபிரஞ்ச் நாட்டைச் சேர்ந்தவருமான அன்னே எலிசபெத் மௌடெட்.

“நெப்போலியனின் ஆட்சியில் வதை முகாம்கள் எதுவும் இல்லை” என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

“நெப்போலியன் சிறுபான்மையினரை தனிப்படுத்தி அவர்களை படுகொலை செய்யவில்லை. மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் காவலர்கள் இருந்தனர். ஆனாலும் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழ்ந்தார்கள், அவர்களால் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த முடிந்தது ” என்கிறார் எலிசபெத்.

மேலும் ஃபிரஞ்ச் மக்கள் நெப்போலியனை சீர்திருத்தவாதியாக பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

நினைவுக்கூரத்தக்க குணாதிசயங்களை அவர் கொண்டிருந்தார். அவர் பல சட்டங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தினார், அவை இன்றும் நடைமுறையில் உள்ளன. பலரும் ஃபிரஞ்ச் ஆட்சியின் கீழ் இருக்க ஆசைப்பட்டனர் என எலிசபெத் தெரிவித்தார்.

அதேவேளையில், நெப்போலியன் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியவரும், லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சார்லஸ் எஸ்டேல் நெப்போலியனை ஒரு போர் விரும்பியாகவும் இரக்கமற்ற மனிதராகவும் பார்ப்பதாக கூறுகிறார்.

“தனிப்பட்ட ஆசைகளால் உந்தப்பட்ட மிகவும் இரக்கமற்ற நபர் அவர். தான் கட்டமைக்க விரும்பிய பிரான்ஸ் குறித்து அவரிடம் தெளிவாக பார்வை இருந்தது. நெப்போலியனின் பிரச்சார உத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. நெப்போலியன் மறைந்தாலும் அவரின் இருப்பு இப்போது வரை தொடர்கிறது. ” என்கிறார் அவர்.

நெப்போலியனை ஹிட்லருடனும் ஸ்டாலினுடனும் ஒப்பிடுவதை இவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

“நெப்போலியனிடம் பல தவறுகள் இருந்தன. ஆனால் ஹிட்லரின் நாஜி ஆட்சிக்கு அடிப்படையாக இருந்த இன வெறுப்பு அவரது ஆட்சியில் இல்லை. நெப்போலியன் இனப்படுகொலை செய்யவில்லை. அவர் காலத்தில் அரசியல் கைதிகள் அதிகளவில் சிறைகளில் அடைக்கப்படவில்லை. எனவே நெப்போலியனை ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோருடன் ஒப்பிட முடியாது ” என்றார்.

ரிட்லி ஸ்காட்டுக்கு தனது படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். “நெப்போலியனை ஸ்டாலின் மற்றும் ஹிட்லருடன் ஒப்பிடுவதன் மூலம் அவரது படத்துக்கு விளம்பரம் கிடைக்கும். அதனால்தான் ரிட்லி இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் ” என்று அவர் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.