;
Athirady Tamil News

அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை – ‘மத சார்பின்மை’ என்று பிரான்ஸ் விளக்கம்!!

0

பிரான்ஸ் அரசு பள்ளிகளில் சில முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 4ம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போதே இந்த விதி அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள், அலுவலகங்களில் மத அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என்ற விதிகள் ஏற்கெனவே கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற அடையாளங்கள் மத சார்பற்ற சட்டங்களை மீறுவதாக அரசு கருதுகிறது.

அரசு நடத்தும் பள்ளிகளில் 2004 ஆம் ஆண்டு முதல் தலைக்கவசம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

“கல்வி நிலையங்களில் உள்ள ஒரு வகுப்பறைக்குள் நுழையும் போது, ​​மாணவர்களின் மதத்தைப் பார்த்து அவர்களை அடையாளம் காண முடியாது,” என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் பிரான்சின், TF1 தொலைக்காட்சியிடம் பேசியபோது கூறினார். மேலும், “பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாபை (முழுநீள தளர்வான ஆடை) இனி அணியக்கூடாது என நான் முடிவு செய்துள்ளேன்,” என்றார்.

பிரான்ஸ் பள்ளிகளில் ஹிஜாப் அணிவது குறித்து பல மாதங்களாக நடந்த விவாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இந்த வகையான ஆடைகள் அதிகளவில் அணியப்படுகின்றன. இதைத் தடை செய்ய வேண்டும் என வலதுசாரி கட்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன, அதே நேரத்தில் இடதுசாரிகள் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். இதனால் அரசியல் சார்ந்த ஒரு பிளவு ஏற்படுகிறது.

“மத சார்பின்மை என்பது பள்ளிகள் மூலம் மாணவர்கள் தங்களை விடுவிப்பதற்கான சுதந்திரம்,” என்று TF1 க்கு அளித்த பேட்டியில் அட்டல் தெரிவித்தார். அப்போது அவர், “மத சார்பற்ற தன்மையை நோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தில் ஹிஜாப் ஒரு மத அடையாளமாக உள்ளது. அதனால் அது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக நிலவும் எதிர்ப்பைச் சோதிக்கும் நோக்கம் கொண்டது,” என்று வாதிட்டார்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தேசிய அளவில் தெளிவான விதிமுறைகளை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

2010 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அரசு பொதுவெளியில் முகத்திரையை அணியத் தடைவிதித்த போது, ஐம்பது லட்சம் பேரைக் கொண்ட முஸ்லீம் சமூகத்தின் கோபத்தை அந்தத் தடை தூண்டியது.

19 ஆம் நூற்றாண்டிலிருந்து, பொதுக் கல்வி நிலையங்களில் கத்தோலிக்க மத அடையாளத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பெரிய சிலுவைகள் போன்ற கிறிஸ்தவ சின்னங்கள் உட்பட, எந்த மத அடையாளங்களைப் பயன்படுத்தவும் கடுமையான தடையை பிரான்ஸ் அரசு அமல்படுத்தியுள்ளது.

மாறி வரும் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு பல ஆண்டுகளாக இது போன்ற தடைச் சட்டத்தை புதுப்பித்து வருகிறது. அதில் இப்போது முஸ்லீம் தலைக்கவசம் மற்றும் யூத மதத்தினர் கிப்பா ஆகியவை அடங்கும். ஆனால் இதுவரை ஹிஜாப் முற்றிலும் தடைசெய்யப்படவில்லை.

தலைநகர் பாரீசின் புறநகர்ப் பள்ளி ஒன்றில் சாமுவேல் பாடி என்ற ஆசிரியர் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதை அடுத்து, செச்னிய அகதி ஒருவர் அந்த பள்ளிக்கு அருகிலேயே அந்த ஆசிரியரின் தலையை வெட்டிப் படுகொலை செய்தார். இந்த சம்பவத்தின் பின்னர் இஸ்லாமிய மத அடையாளங்கள் குறித்த விவாதங்கள் பெருமளவில் நடந்தன.

34 வயது அட்டலை அதிபர் இம்மானுவேல் மக்ரோங் இந்த கோடையில் கல்வி அமைச்சராக நியமித்தபின் அவர் வெளியிடும் மிக முக்கிய கொள்கை முடிவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல முஸ்லீம் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அமைப்பான CFCM, ஆடைகள் மட்டும் “மத அடையாளம்” இல்லை என்று கூறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய இஸ்லாமிய அமைப்பான The CFCM, ஆடைகளை அணிவது மட்டுமே மத அடையாளம் என கருத முடியாது என்று கல்வி அமைச்சரின் அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.