;
Athirady Tamil News

சந்திரயான்-3: இந்திய விண்வெளித் துறை மதிப்பு ரூ.82 லட்சம் கோடியைத் தொடுமா? எப்படி?!!

0

1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் ஆனார். “ஒரு மனிதனுக்கு இது ஒரு சிறிய படி. ஆனால் மனித குலத்துக்கு பெரிய முன்னெடுப்பு” என்றார் அவர்.

உலக விண்வெளி வரலாற்றில் அவரது வார்த்தைகள் பழமொழி போலவே ஆகிவிட்டன.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தில் புதன்கிழமை மாலை தரையிறங்கியது.

விக்ரம் லேண்டரிலிருந்து இறங்கிய ரோவர் பிரக்யான் நிலாவின் நிலப்பரப்பில் தனது பணியை தொடங்கியுள்ளது.

ரோவர் பிரக்யான், ஒரு நொடியில் ஒரு செ.மீ மட்டுமே நகரும். எனினும், நிலாவில் இந்த சிறு அடி, உலக அரசியலிலும் நிலவு பொருளாதாரத்திலும் எவ்வளவு முக்கியம் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியும்.

“இந்தியா சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக நிலாவில் தரையிறக்கியதால், உலக அரசியலில் மிகப்பெரிய அடியை முன்னெடுத்து வைத்துள்ளது” என்று இண்டர்நேஷனல் கரண்ட் அஃபயர்ஸ் ஃபாரின் ஃபாலிசி கூறுகிறது.

தற்போது நிறைய நாடுகள், விண்வெளியில் ஆராய்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்காக நிறைய பணமும் செலவு செய்கின்றனர்.

இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே நிலாவின் தென் துருவத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நேரத்தில், வெற்றிகரமாக சந்திரயான் – 3 தரை இறங்கியதால் தென் துருவத்தில் புதிய ஆய்வுகள் மேற்கொள்ள வழி வகுக்கும்.

உலக விண்வெளி ஆய்வில் இந்தியா சந்திரயான் 3 வெற்றி்யின் மூலம முக்கிய இடத்தில் உள்ளது.
இந்திய விண்வெளி துறையின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி துறையின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை (ஒரு லட்சம் கோடி டாலர்- இந்திய மதிப்பில் 82 லட்சம் கோடி ரூபாய்) வரும் ஆண்டுகளில் தொட்டு விடும் என்கிறார்.

சந்திரயான் – 3 -ன் வெற்றிக்கு பிறகு, இந்த இலக்கை அடைவது கடினமாக இருக்காது என்றும் பேசப்படுகிறது.

இந்த வெற்றியால், இந்திய இளைஞர்கள் விண்வெளித் துறைக்கு ஈர்க்கப்படுவர். தக்ஷஷீலா நிறுவனத்தில் விண்வெளி மற்றும் உலக அரசியலில் ஆய்வு செய்து வரும் ஆதித்ய ராமநாதன், இதை ஒரு பணியாக இளைஞர்கள் எடுத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்.

நிலாவில் மதிப்புமிக்க கனிமங்கள், மற்றும் அதிக அளவிலான எரிபொருள் வளங்கள் இருக்கலாம் என கருதப்படும் பின்னணியில், பல நாடுகள் நிலாவில் ஆய்வு செய்ய தயாராகக் கூடும்.

இந்நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 நிலவை நோக்கிய சர்வதேசப் போட்டியில் முன்னோடியாகியுள்ளது.

சீனா நிலாவுக்கு சென்றால், அந்தப் பகுதியை தனது என சொந்தம் கொண்டாடும் என அமெரிக்கா கவலைப்படுகிறது.

நிலவை சென்றடைவதில், அறுபது ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போட்டி நிலவி வருகிறது, தற்போது புதிய போட்டி தொடங்கியுள்ளது.

தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகள் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால், அனைவரது கவனமும் தற்போது தென் துருவத்தின் மீது திரும்பியுள்ளது.

ரஷ்யா தனது நிலவுக்கான பயணத்தை 47 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது. எனினும், தென் துருவத்தை நோக்கிய ‘லூனா-25’ என்ற திட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி தோல்வியடைந்து விட்டது.

சரியாக மூன்று நாட்கள் கழித்து, சந்திரயான் 3 நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

2025ம் ஆண்டில் நிலாவின் தென் துருவத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

2030க்குள் சீனா ஆளில்லா விண்கலத்தையும், பின்பு மனிதர்களையும் நிலாவின் தென் துருவத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இவர்களை தவிர இஸ்ரேல், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் நிலவுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களது முயற்சிகள் இது வரை வெற்றியடையவில்லை.

நிலாவின் தென் துருவத்தில் உண்மையிலேயே நீர் இருந்தால், அது ராக்கெட்டுகளுக்கு எரிபொருளாக பயன்படக் கூடும். அதனால் தான் தென் துருவத்தின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

நிலாவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டால், அங்கு நிரந்த மையம் அமைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அல்லது, செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நிலவில் விண்வெளி மையம் அமைக்க முடியும்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நாசாவின் மூத்த அதிகாரி பில் நீல்சன், “நிலாவின் தென் துருவத்தில் உண்மையிலேயே தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் இருந்தால், அது எதிர்கால விண்வெளி வீரர்களுக்கும் விண்கலன்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.

ஆனால், நிலவின் தென் துருவத்தில் சீனா மனிதர்களை முதலில் இறக்கினால், அந்தப் பகுதியை தனது என சொந்தம் கொண்டாடக்கூடும் என்றும் அவர் கூறினார்.

2020ம் ஆண்டு ஆர்டிமிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. பல நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் படி, விண்வெளி வளங்களை சமமாக பகிர்ந்து கொள்வது, விண்வெளி ஆய்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், விண்வெளி ஆய்வில் பெரும் சக்திகளான சீனாவும் ரஷ்யாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

சந்திரயான் 3-ன் வெற்றி நிலவை நோக்கிய திட்டங்களுக்கான போட்டியை அதிகரித்துள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தப் போட்டியில் இந்தியா முன்னிலையில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் நிலவுக்கு செல்ல விரும்புகின்றனர்.

வில்சன் மையத்தில் உள்ள தெற்கு ஆசிய மையத்தின் இயக்குநர் மைக் குகல்மான், இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றி அடைந்ததால், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் பலன்கள் உண்டு என்றார்.

இந்தியாவின் இதற்கு முந்தைய விண்வெளி திட்டங்களை குறிப்பிட்டு பேசிய அவர், நிலத்தடி நீர் மட்டம் கண்காணிக்கவும், உலக காலநிலை கண்காணிக்கவும் அவை உதவியாக இருந்தன என்றார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் நாடுகளுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சிந்தனையாளர்களைக் கொண்ட அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் டாக்டர் ராஜி ராஜகோபாலன், பிபிசியிடம் பேசும் போது, “சந்திரயானின் வெற்றி, உலக விண்வெளி ஆய்வில் முக்கிய தாக்கத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்தும்” என்றார்.

“இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் இந்தியா மிகவும் பக்குவம் அடைந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

நிலாவில் கிடைக்கும் வளங்களை சமமாக பகிர்ந்துக் கொள்ளவும், ஆய்வின் போது சில நடைமுறைகள் பின்பற்றாவும் ஆர்டிமிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியா மிக குறைந்த செலவில் இத்திட்டத்தை சாத்தியப்படுத்தி இருப்பதாக டாக்டர் ராஜி ராஜகோபாலன் தெரிவித்தார்.

நிலவு பொருளாதாரம் என்றால் என்னவென்று சர்வதேச ஆலோசனைகள் வழங்கும் நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நிலாவில் உள்ள வளங்களை நிலவிலும் பூமியிலும் பயன்படுத்துவது, மேலும் நிலவின் சுற்று வட்டப்பாதையிலும் பயன்படுத்துவது நிலவு பொருளாதாரம் எனப்படும்.

உதாரணமாக நிலாவில் ஹீலியம்-3 அதிகம் இருந்தால், அது தான் நிலவில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஆதாரமாகும். நிலவு பொருளாதாரத்தில் ஹீலியம் முக்கியமானதாகும்.

அந்த அறிக்கையில், நிலாவில் எந்த பகுதி எந்த நாட்டுக்கு என்ற சண்டைகளும் நாடுகளுக்கு இடையே உருவாகலாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி என்றால், இந்தியா பெருமையுடன் தாம் தான் முதலில் தென் துருவத்துக்கு சென்றது என தனது இடத்தை கோரும் என நிபுணர்கள் கருதுகின்றனர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.