;
Athirady Tamil News

இந்தியா வழியாக வரும் ரஷ்ய எண்ணெய்: கவலை தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் !!

0

ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆணையர் வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேசியபோது, யுக்ரோன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர், அந்தப் போரை நீண்ட காலத்துக்கு நீட்டிக்காவண்ணம் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இந்தியா வழியாக ஐரோப்பிய சந்தைகளுக்கு வருவதால், அந்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஏராளமான பெட்ரோலியப் பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளுக்கு வரும் நிலையில், அதை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து விவாதித்து வருவதாகத் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் தகவலின்படி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்கள் இந்தியா வழியாக வருவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், இது இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான தாராளமய வர்த்தகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் தெரியவந்துள்ளது.

சனிக்கிழமையன்று இது குறித்துப் பேசிய வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ், தானியங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்தி, அதன் மூலம் யுக்ரேன் மீதான போரை தொடர்ந்து நடத்திவருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஏராளமான ரஷ்ய பெட்ரோலிய பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளுக்குச் செல்வதாக ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆணையர் வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ப்ளூம்பெர்க்கில் வெளியான அறிக்கை ஒன்றில் இந்தியாவின் உதவியுடன் ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்கள் இன்னும் ஐரோப்பாவை அடைகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு மே மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைகள் பிரிவின் தலைவர் ஜோசப் பாரெல் ஒரு பேட்டியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி, அதை சுத்திகரிப்பு செய்து பெரிய அளவில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்துவருவதாகவும், இதைத் தடுப்பதில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்வது 2022ம் ஆண்டில் 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் முறையாகக் கடைபிடிக்கப்படவில்லை என்றும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜுன் மாதம் பேசிய ஜோசப் பாரெல், இந்தியாவை அவர் விமர்சிக்கவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றிய தொழில் நிறுவனங்கள் அந்த பொருளாதாரத் தடையை எப்படி சர்வசாதாரணமாகக் கடந்து சென்றன என்பதை விளக்க முற்பட்டதாகத் தெரிவித்தார்.

கப்பல்களின் நகர்வு குறித்த தரவுகளை சேகரிக்கும் கெப்ளர் தளத்தை மேற்கோள் காட்டி அல் ஜசீரா வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதற்கு முன்பு, இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் பேரல் டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்திய பின் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேரல்களாக அதிகரித்தது.

இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் கூறுகையில், “ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கவில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதே நேரம், ஐரோப்பிய சந்தைகளை ரஷ்யா இழந்து விட்டது என்பதும், அதைத் தொடர்ந்து வேறு வழிகளை அந்நாட்டு அரசு தேடிவருகிறது என்பதையும் நன்றாக நாங்கள் அறிந்திருக்கிறோம்,” என்றார்.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேட்டபோது, “வர்த்தகத்தில் ஒரு புதிய பாதையை நாங்கள் பார்க்கிறோம். இதன் காரணமாக புதிய பிரச்னைகள் எழுந்துள்ளன. இவற்றைச் சமாளிப்பது குறித்து நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் அவர்.

தற்போது இந்தியாவிலிருந்து பெரும் அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்துவருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

ரஷ்ய பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்த அவர், “இந்த பொருட்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற நிலையில், அது நிச்சயமாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையைத் தாண்டி வருவது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ரஷ்யாவின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அதனால் பயன் கிடைக்கவில்லை என்பது ஒரு முக்கியமான பிரச்னை,” என்றார்.

தொடர்ந்து பேசிய வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ், பெட்ரோலியப் பொருட்கள் ரஷ்யாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக விளங்குகின்றன என்பதால், போர் தொடங்கியபின் அந்நாட்டின் மீது தடை விதித்தபோது, பெட்ரோலியப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடைவிதிக்கவேண்டும் என்பது மையக்கருத்தாக இருந்தது என்றார்.

தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை மிகவும் உணர்ச்சிமயமானதாக இருக்கும் நிலையில், உலக நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் நிலவுவதாகவும், அத்தகைய சூழ்நிலையில், நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ரஷ்யா பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான தனது திறனை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. ஆனால் அரசியல் சார்ந்த சந்தைப் பொருட்கள் அல்லது அரசியல் வர்த்தகம் என்று எதுவும் இல்லை. வர்த்தக பிரச்னைகள், புவிசார் அரசியல், நட்பு ஆகியவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதே இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமைந்துள்ளது,” என்றார்.

“இந்த சூழலில், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மூலோபாய உறவு மிகவும் முக்கியமானது. அதனால் இந்த பெரிய சவாலைச் சமாளிக்க இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்பட வேண்டும்.”
ரஷ்யாவும் தானிய ஒப்பந்தமும்

யுக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஜி 7 நாடுகளும் பல்வேறு கடுமையான விதிகளை அமல்படுத்தின.

இருப்பினும், இந்த நேரத்தில் ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது. இதனால் இந்திய எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது.

போரினால் தானிய பற்றாக்குறை ஏற்பட்ட போது, ரஷ்யாவும், யுக்ரேனும் 2022 ஜுலை 22ம் தேதி ஒரு உடன்படிக்கையை எட்டின. ஐக்கிய நாடுகள் அமைப்பும், துருக்கியும் இணைந்து இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டன.

பின்னர் நவம்பர் 2022, மே 2023, மற்றும் 17 ஜுலை 2023-ல் மூன்று முறை அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேற ரஷ்ய அதிபர் விரும்பினார்; உடன்படிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த தானிய உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறியது மட்டுமல்ல, யுக்ரேன் நாட்டில் உற்பத்தியான தானியங்களை உலக நாடுகள் பெற முடியாத நிலை ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

ஆனால், மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் மனிதநேயத்தைக் கடந்து வணிக நோக்கில் முடிவுகள் எட்டப்பட்டதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டிவருகிறது.

புதின் ரஷ்யாவின் விவசாய வங்கியான ரோசெல்கோஸ்பேங்க்-ஐ (Rosselkhozbank) மீண்டும் ஸ்விஃப்ட் ( SWIFT- உலகெங்கிலும் உள்ள வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு) உடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் துருக்கி அதிபர் எர்துவானின் முயற்சியைத் தொடர்ந்து யுக்ரேனுடன் ரஷ்யா ஒரு தானிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டது.

ரஷ்யாவைப் பற்றிப் பேசும் போது, 2021-ல், எண்ணெய் மற்றும் அது சார்ந்த தயாரிப்புக்களும், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவை தான் அந்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாக இருந்தன. இந்த பொருட்களை வாங்கும் மிகப்பெரிய நாடுகளாக சீனா, ஜெர்மனி, அமெரிக்கா, பெலாரஸ், கொரியா ஆகிய நாடுகள் இருந்தன.

தற்போதைய நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து இந்தியா சுத்திகரிப்பு செய்த விமான எரிபொருளை மிக அதிக அளவில் பிரிட்டன் இறக்குமதி செய்துள்ளதாக பிபிசி நியூஸ் நைட்டின் சர்வதேசச் செய்தியாளர் அமிர் நாடெர் தெரிவித்தார்.

குளோபல் விட்னஸ் என்ற அரசு சாரா அமைப்பின் கூற்றுபடி, இது போன்ற இறக்குமதி – ஏற்றுமதி ஆகியவை சட்டப்பூர்வமானவை தான் என்றும் ஆனால் இதில் அறம் சார்ந்த பல கேள்விகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டின் இறக்குமதி – ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்களைப் பார்த்தால், ஈராக், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து இந்தியா பெரும் அளவில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தது.

அதே நேரம் ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் பெரும்பாலான பெட்ரோலியப் பொருட்கள் தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மறுபுறம், 2022-ம் ஆண்டின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், ரஷ்யாவிலிருந்து இந்தியா பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வது பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியா பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது. ஏற்றுமதியைப் பொறுத்தளவில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

2023-ம் ஆண்டின் தொடக்கம் வரை கிடைத்துள்ள புள்ளி விவரங்களின்படி, அந்த நிலை மெதுவாக மாறத் தொடங்கியது. ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.

ரஷ்யாவிலிருந்து சீனா அதிக அளவில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த நிலையில் அதை விட அதிகமாக இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது.

இந்தியாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இருதரப்புக்கும் இடையே 120 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியாவின் பங்கு மட்டும் 10.8 சதவிகிதமாக இருந்தது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியம் பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2 சதவிகிதமாக இருக்கிறது.

இது தொடர்பாக வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேசியபோது, இந்தியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவுடன் பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும், முதலீடுகளைச் செய்யவும் அதிக ஆர்வம் காட்டிவருகிறது.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தற்போது மூன்று ஒப்பந்தங்கள் தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன-

1. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

2. முதலீட்டைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம்

3. புவியியல் குறியீடுகள் ஒப்பந்தம்

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் தகவல் பகிர்வுக்காக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைப்பதை இருதரப்பினரும் கடந்த ஆண்டு அறிவித்தனர்.

முன்னதாக ஜூன் 2021 இல், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் அத்தகைய தொழில்நுட்ப கவுன்சில் அமைக்க உடன்படிக்கை மேற்கொண்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது தேர்வாக இந்தியா விளங்குகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.