;
Athirady Tamil News

காணிகளை பகிர்ந்தளிக்கவும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை !!

0

கிளிநொச்சி மாவட்டத்தின், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் ஒருபகுதியையேனும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவிடயமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் திங்கட்கிழமை (28) வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

காணியற்ற நிலையில் வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக, தாங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் என்னால் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவை தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மேற்படி காணிகள் தென்னிலங்கையின் தொழிலதிபர்களுக்கும், எமது மாவட்டத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கோடு இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கும் பகுதி பகுதியாகக் கூறுபோடப்படுவதை, கையாலாகாத்தனத்தோடு பார்த்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் தர்மக்கேணிப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு காணி, புத்தளத்தைத் தளமாகக் கொண்ட ஓர் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, அக்காணியின் துப்புரவுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.

போரினாலும், இடப்பெயர்வுகளாலும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு இந்த மண்ணிலே மீளவும் குடியேறி, தமக்கென்றொரு நிலையான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு சொந்தக் காணியற்ற நிலையில் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும், காணிகளிலும் வாழவேண்டிய அவலநிலைக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நிர்க்கதியற்றிருக்கத்தக்கதாக, அரச காணிகளை தனவந்தர்களுக்கும், இந்த மாகாணத்தோடு எந்தத் தொடர்புகளுமற்றவர்களுக்கும் தாரைவார்த்துக் கொடுப்பதென்பது, அல்லலுறும் எமது மக்களுக்குச் செய்யப்படுகின்ற துரோகச்செயலாகவே அமையும் என்பதில் தாங்களும் கரிசனம் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இதுதவிர, தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, எமது மக்களின் பூர்வீக நிலங்கள் மெல்லமெல்ல பறிபோகும் அபாயகரமான நடைமுறைச் சூழலொன்றின் பின்னணியில், நீண்டகாலமாக வெற்றுக் காணிகளாக உள்ள பச்சிலைப்பள்ளியின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு காணிகளுக்கும் அதேகதி ஏற்படாது என்பதற்கு எம்மிடம் எதுவித உத்தரவாதமும் இல்லை.

இந் நிலையில், குறித்த காணிகளின் ஒரு பகுதியையேனும் காணியற்ற எமது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் இருப்பை நிலைநிறுத்துவதற்கு ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.