ஜி20 உச்சி மாநாடு- டிரோன், சின்ன விமானம் என எதுவும் பறக்கக் கூடாது – டெல்லி காவல் துறை அதிரடி!!!
ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்பட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிலைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.ஏ.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான தடை உத்தரவு இன்று (ஆகஸ்ட் 29) துவங்கி, செப்டம்பர் 12-ம் தேதி ஆகிய 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.