ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6 பிராந்தியங்களை குறிவைத்த உக்ரைன் டிரோன்கள்!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிக் கொண்டிருந்த உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக டிரோன் மூலம் முக்கியமான இடத்தை டார்கெட் செய்து வருகிறது. இதனால் ரஷியாவில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், கட்டிடங்கள் போன்றவை கட்டமைப்புகள் சேதம் அடைந்து வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை (இன்று) ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 18 மாதங்களில் ரஷியா மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. ரஷியாவின் மேற்கு பிராந்தியமான பிஸ்கோவில் உள்ள விமான நிலையம் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் கவர்னர் மற்றும் மீடியாக்கள் தெரிவித்தன. இதற்கிடையே ஓர்யோல், பிரயான்ஸ்க், ரியாஜான், கலுகா மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிஸ்கோ பிராந்தியம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு Il-78 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பிஸ்கோவ் கவர்னர் மிஹைல் விடேர்னிகோவ், இந்த விமான நிலையத்தில் வரும், செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.