தென் கொரிய நிறுவனம் இலங்கையில் முதலீடு!!
தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான கங் இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சில் இன்று (29.08.2023) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இலங்கையில் மீன்களுக்கான உணவு, கடலுணவு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மீன்பிடி படகு தொழிற்சாலை ஆகிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் கடற்றொழில் துறைமுக வளாகத்தில் இத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் அவர் அமைச்சரிடம் சுட்டிக் காட்டினார்.
தொடரந்து கருத்து தெரிவித்த கொரிய தொழிலதிபர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாம் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டால் பல பில்லியன் ரூபாக்களை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் அதனடிப்படையில் குறித்ததொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், இத் தொழிற்சாலை இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அதன் பொருட்டு வர்த்தக அமைச்சுடன் பேசி உரிய நவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.