இஸ்ரேல் வீரருடன் கை குலுக்கியதால் ஆயுட்கால தடை: ஈரான் அதிரடி!!
மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடு ஈரான். யூதர்களின் பெரும்பான்மை கொண்ட மற்றொரு மேற்கு ஆசிய நாடு இஸ்ரேல். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக பகை இருந்து வருகிறது. இஸ்ரேலை தனது நாடு என ஈரான் உரிமை கொண்டாடி வருவதால் உருவான இந்த பிரச்சினை, இரு நாட்டு உறவுகளையும் பல துறைகளில் மோசமடைய செய்திருக்கிறது. 2021-இல் ஈரானின் முக்கிய தலைவரான அயதுல்லா அலி கமேனி, ஈரான் நாட்டு விளையாட்டு வீரர்கள் எந்த உலக அரங்கிலும் இஸ்ரேல் நாட்டு வீரர்களுடன் கை குலுக்குதலில் ஈடுபட கூடாது என அறிவித்திருந்தார்.
பல ஆண்டுகளாகவே ஈரானின் ஓட்டப்பந்தய மற்றும் தடகள வீரர்கள் உலகளவில் நடைபெறும் போட்டிகளில், இஸ்ரேலி வீரர்களுடன் தனியாக போட்டியிடும் சூழலை தவிர்த்து வந்தனர். இதற்காக தாங்களாகவே தகுதிநீக்கம் பெறுவதும், மருத்துவ சான்றிதழ் வழங்கி போட்டியில் இருந்து விலகுவதும் கூட நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள விலிக்ஸ்கா நகரில், உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 40-வயதான ஈரான் நாட்டை சேர்ந்த பளுதூக்கும் வீரர் மொஸ்தஃபா ரஜேய் மேடையில், விளையாட்டுக்கான சம்பிரதாய முறைப்படி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் மக்ஸிம் ஸ்விர்ஸ்கி என்பவருடன் கை குலுக்கி கொண்டார்.
இந்த நிகழ்வையடுத்து ஈரான் நாட்டு பளுதூக்கும் விளையாட்டிற்கான கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “இஸ்லாமிய குடியரசின் சிகப்பு கோட்டை மொஸ்தஃபா தாண்டி விட்டார். மொஸ்தஃபா அவரது ஆயுட்காலம் முழுவதும் விளையாட்டுகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி போலந்து போட்டிக்கு வீரர்களை தலைமை ஏற்று செல்லும் பொறுப்பில் இருந்த ஹமித் சலேஹினியா தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டார்,” என்று குறிப்பிட்டு இருக்கிறது. மொஸ்தஃபா, 2015-இல் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈரான் நாட்டின் தேசிய அணி வீரராக பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.