மெகலோடன்: திமிங்கலங்களை வேட்டையாடும் ராட்சத சுறா – எவ்வளவு பெரியது தெரியுமா?!!
ஹாலிவுட் திரைப்படான ‘மெக்’ வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலத்தில் கடலை ஆண்ட ராட்சத சுறாவின் கதையான ‘மெகலோடன்’, அதன் தொடர்ச்சியைப் பெற்றது.
‘மெக்’ மற்றும் ‘மெக் 2’ திரைப்படங்களில் காட்டப்படும் இந்த கடல் உயிரினம் ஒரு காலத்தில் உண்மையாக வாழ்ந்தது.
இரண்டு கோடி ஆண்டு காலம் கடலில் பயங்கரத்தை நிகழ்த்திய இந்த மாபெரும் உயிரினம் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துவிட்டது.
இந்த ராட்சத சுறாக்கள் எப்படி வாழ்ந்தன என்பத பற்றியும், எப்படி வேட்டையாடின என்பதைப் பற்றியும் பல சுவாரஸ்யமான விவரங்கள் புதிய ஆராய்ச்சி மூலம் கிடைத்துள்ளன.
மெகலோடன் பற்றிய விவரங்கள் முதன்முதலில் 1840 இல் அறியப்பட்டன. ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் முக்கோண வடிவ பற்களின் புதைபடிவ எச்சங்களை கண்டுபிடித்தனர்.
மெகலோடன் என்றால் பண்டைய கிரேக்க மொழியில் பெரிய பல் என்று பொருள். அவற்றின் பற்களின் நீளம் 16.8 சென்டி மீட்டராக இருந்தது.
பெரிய வெள்ளை சுறாவின் பற்கள் 7.5 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கின்றன. இதிலிருந்து ராட்சத சுறாக்களின் பற்கள் எவ்வளவு பெரியவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
மெகலோடன் சுறாவின் அளவை ஒட்டுமொத்தமாகப் புரிந்து கொள்ள, அதன் முழுமையான எலும்புக்கூட்டை கண்டுபிடிப்பது அவசியம். அது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சுறாக்கள் குருத்தெலும்பு மீன்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. வேறு வகையில் கூறுவதானால், இந்த சுறாவைக் கூட குருத்தெலும்பு மீன் என்று அழைக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், இந்த மீனின் உடல் கடினமான எலும்புகளால் ஆக்கப்பட்டது என்பதை விட மென்மையான நரம்புகளால் ஆக்கப்பட்டது என்பதே ஆகும். அதாவது அவை முழுமையான படிமங்களாக மாற முடியாது.
இதன் விளைவாக, ராட்சத சுறாக்களின் புதைபடிவ பதிவில் அவற்றின் பற்களும், குறைந்த எண்ணிக்கையிலான முதுகெலும்புகளும் இடம்பெற்றுள்ளன.
அவை எப்படி இருந்தன என்று இப்போது கற்பனை செய்வது மிகவும் கடினம் என்று சோரா கிம் கூறுகிறார். அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் வேதியியலாளராக பணிபுரிகிறார். அவர் மெகலோடன் பற்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
பண்டைய விலங்கியல் வல்லுநர்கள் மெகலோடன் பற்களை மற்ற சுறாக்களுடைய பற்களின் அளவோடு ஒப்பிடுகின்றனர். இதன் மூலம் அது எவ்வளவு பெரிய மீனாக இருக்கும் என்று மதிப்பிட அவர்கள் முயல்கின்றனர்.
ஆனால் இது சரியான முயற்சி என்றோ அல்லது எதிர்பார்க்கும் பலனைத் தரும் என்றோ சொல்ல முடியாது. ஏனெனில் ஒரே இனத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகளின் அளவை சிறிய விலங்குகளிள் அளவுகளிலிருந்து மதிப்பிட முடியாது. விலங்குகளின் உடல் அமைப்பு ஒரு ஒழுங்கான வரைமுறைப்படி அமைந்துள்ளது எனக்கூற முடியாது.
அதனால்தான் மெகலோடனின் அளவு குறித்து பல்வேறு வாதங்கள் உள்ளன.
மெகலோடன்களின் பற்களின் நீளம் 16.8 சென்டி மீட்டராக இருந்தது.
சில ஆய்வுகள் மெகலோடன் சுமார் 18 முதல் 20 மீட்டர் நீளம் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றன.
ஆனால் சிகாகோவின் டீபால் பல்கலைக் கழகத்தில் உள்ள பேலியோபயாலஜிஸ்ட் கென்ஷு ஷிமாடா கூறுகையில், 2019 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மேற்கண்ட வாதங்களும், அனுமானங்களும் தவறானவை என்று கண்டறியப்பட்டதாக வாதிட்டார்.
சுறாவின் பற்களை அளவிடும் போது, 15.3 சென்டி மீட்டருக்கு மேல் நீளம் இல்லாத மேல் பற்களை அளவிடுவது நல்லது என்று அவர் வாதிட்டார்.
அதற்கு அடுத்த ஆண்டு, கெய்னெஸ்வில்லில் உள்ள புளோரிடா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் விக்டர் பெரெஸின் குழு ஒரு புதிய வாதத்தை முன்வைத்தது.
பெரிய பற்களின் நீளத்துடன் கூடுதலாக பற்களின் அகலத்தையும் அந்தக் குழு ஆய்வு செய்தது. இதன் காரணமாக, மெகலோடனின் வாய் முழுமையாகத் திறந்திருந்த போது எவ்வளவு பெரியது என்பதை அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களின் ஆய்வில், மெகலோடனின் நீளம் சுமார் 20 மீட்டர் இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
பழங்கால கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியாளர் கேட்லின் பிமியென்டோ, அக்குழுவினரின் பகுப்பாய்வு ஓரளவு உறுதியானது என்றார். சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகத்தில் அவர் பணிபுரிகிறார்.
இந்நிலையில், தற்காலத்தில் பெரியதாகக் கருதப்படும் சுறாக்கள், பழங்காலத்தில் வாழ்ந்த இந்த மாபெரும் சுறாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை.
தற்போதைய கால கட்டத்தில் பெரிய வெள்ளை சுறா கடலில் உள்ள மிகப்பெரிய மாமிச உண்ணி சுறா ஆகும். இதன் நீளம் 4.9 மீட்டர் என கூறப்படுகிறது.
அதாவது மெகலோடன் இதை விட மூன்று அல்லது நான்கு மடங்கு நீளமானதாக இருந்திருக்கலாம்.
மெகலோடனுக்கு மிக நெருக்கமான விலங்காக திமிங்கலத்தைக் கருதலாம். இது இன்று உலகில் வாழும் மிகப்பெரிய கடல் விலங்காக அறியப்படுகிறது. ஆனால் திமிங்கிலம் ஒரு வேட்டையாடும் விலங்கு அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். இவை இரண்டும் பலீன் திமிங்கலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை.
மிகப்பெரிய நீல திமிங்கலங்கள் கூட சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டவையாகத் தான் உள்ளன.
மெகலோடான் மிகப்பெரிய விலங்கு என்று சொல்ல முடியாது. ஒருவேளை இது சுறாக்களில் மிகப்பெரியது என்று கருதமுடியும். இது மற்ற பெரிய சுறாக்களை உண்ணும் மிகப்பெரிய சுறாவாக இருந்திருக்கலாம்.
மெகலோடன் எவ்வளவு பெரிய உயிரினமாக இருந்திருக்கும் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமான செயலாக உள்ளது.
மெகலோடன் மற்ற விலங்குகளை அதன் மிகப்பெரிய பற்களால் கடித்துக் குதறி உண்பதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது என்ன வகையான விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறது? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, ஆராய்ச்சியாளர்கள் மெகலோடனின் பற்கள் மீது இரசாயன ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வுகளில் அவற்றில் ஒன்று நைட்ரஜனுடன் தொடர்புடையது. ஒரு விலங்கின் உடலில் இருக்கும் நைட்ரஜன் அது உண்ணும் உணவில் உள்ள புரதத்தில் இருந்து வருகிறது.
இதை வைத்துப் பார்த்தால், அதிக உணவு உண்ணும் விலங்குகளின் பற்களில் நைட்ரஜன் அதிகமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டு ஆய்வில், மெகலோடான் பற்களில் அதிக அளவு நைட்ரஜன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். அவர்களில் ஆராய்ச்சியாளர் கிம்மும் இருந்தார்.
இந்த முடிவின் படி, மெகலோடன் ஒரு கடல் உயிரினம் என்பது மட்டுமின்றி இது பெரிய அளவிலான நவீன ஓர்க்கா திமிங்கலங்களைக் கூட வேட்டையாடி, உண்ணக் கூடியது என அறியப்பட்டது.
2022 இல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வின் போது, ஷிமாடா மற்றும் கிம் இருவரும் துத்தநாக ஐசோடோப்புகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மெகலோடன்கள் பெரிய வெள்ளை சுறாவைப் போலவே இருக்கும் என்ற முடிவு எட்டப்பட்டது.
சிறிய மற்றும் பெரிய மெகலோடனுக்கு இடையிலான வேறுபாடு இத்தகைய நிச்சயமற்ற தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என்று பிமியென்டோ கூறினார்
வெள்ளை சுறாக்களில் சிறியவை பெரும்பாலும் மீன்களை சாப்பிடுகின்றன. பெரிய சுறாக்கள் பெரிய கடல் விலங்குகளை உண்கின்றன. மெகலோடன்களும் இதே போல்தான் செயல்பட்டிருக்க வேண்டும்.
மேலும் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ராட்சத சுறா மீன்களின் இனப்பெருக்கம் குறித்து சில விஷயங்கள் அறியப்பட்டன. ஷிமாடா குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
பிறந்து இரண்டு மீட்டர் நீளம் வளர்ந்திருக்கும் ஒரு விலங்கையும் ஆய்வு செய்தனர். பெரிய அளவிலான இந்த மீன் பல மீன்களைப் போல முட்டையாக வெளிவராமல் தாயின் கருவறைக்குள் இருக்கும். அதாவது மெகலோடன் தன் வயிற்றில் குஞ்சு பொரிக்கிறது.
இந்த சுறா தாயின் வயிற்றில் கரு நிலையில் இருக்கும் போதே மற்ற முட்டைகளை சாப்பிட்டு பெரிதாக வளரும் என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது. இந்த நிகழ்வு, அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கிறது என்பது மட்டுமின்றி நவீன சுறாக்களிடையேயும் பொதுவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மெகலோடன் சில தனிப்பட்ட உடல் திறன்களைக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், பிமியென்டோ குழுவினர் ஒரு சுறா மீனின் அரிய, முழுமையான முதுகெலும்பை ஸ்கேன் செய்தனர். அதன் உதவியுடன் முழு மெகலோடன் வடிவத்தையும் புனரமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கட்டமைப்பின் அடிப்படையில், மெகலோடன் நீச்சலில் மிகவும் திறமையானது என்பதுடன் நீண்ட தூரத்தை விரைவாக கடக்கும் திறன்வாய்ந்தது என்று முடிவு செய்யப்பட்டது. இது சுறாக்களின் தற்போதைய வேகத்தை விட அதிகமாக ஒரு நிமிடத்துக்கு 1.4 மைல் வேகத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்குகுழுவினர், அவர்கள் உருவாக்கிய வடிவத்திலிருந்து வயிற்று அளவையும் மதிப்பிட்டனர். மெகலோடனுக்கு மிகவும் அகலமான வாய் திறப்பு இருப்பதாகவும் மேலும் பெரிய விலங்குகளை எளிதாக சாப்பிட முடியும் என்றும் பிமியென்டோ கூறினார்.
ஒரு பெரிய மெகலோடன் ஓர்கா அளவிலான விலங்கை எளிதில் மென்று சாப்பிடும். இப்படிப்பட்ட உணவுமுறையால் பல நாட்கள் உணவு இல்லாமல் இருந்தாலும் அதை சமாளிக்கும் விதத்தில் இருந்தது. ஒரு முறை வேட்டையாடினாலும் மெகலோடன் நீண்ட தூரம் பயணிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மெகலோடன் ஒரு மாபெரும் நீர்வாழ் விலங்கு என்றும், இது மற்ற விலங்குகளை வேட்டையாடி கடல்களில் சுற்றித் திரிந்தது என்றும் பிமியென்டோ குழு கூறுகிறது.
இந்த சுறாக்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையால், அவற்றின் உடலில் ஓடும் இரத்தம் மிகவும் சூடாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக குளிர்ந்த நீரில் கூட வேகமாக நீந்த முடியும்.
ஆனால் அவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன.