அணுகுண்டு ரகசியங்களை சோவியத் யூனியனுக்கு கடத்திய விஞ்ஞானியை அமெரிக்கா என்ன செய்தது தெரியுமா?!!
ரஷ்யா உட்பட பல நாடுகளாக தற்போது பிரிந்து கிடக்கும் தேசங்கள் முன்பு சோவியத் யூனியனாக ஒன்றாய் திகழ்ந்து வந்தன.
அந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனால் 1953 க்கு முன், அணு ஆயுதங்களை பெற முடியாது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ மதிப்பிட்டிருந்தது.
சிஐஏவின் இந்த கணிப்பை தவிடுபொடியாக்கும் விதத்தில், 1949 ஆகஸ்ட் 29 இல், புளூட்டோனியம் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி மேற்கத்திய நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது சோவியத் யூனியன்.
இந்த வகை அணுகுண்டை பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையும் சோவியத் யூனியனுக்கு கிடைத்தது.
அணுகுண்டு தயாரிப்பு தொழில்நுட்பங்களையும், ரகசிய தகவல்களையும் வழங்கிய தியோடர் ஹால் என்ற அமெரிக்க விஞ்ஞானியும், சோவியத் யூனியன் அணுசக்தி வல்லமை மிக்க நாடாக மாறியதற்கு காரணமாக இருந்தார் என்பதுதான் இதில் வியக்கத்தக்க விஷயம்.
தியோடர் ஹாலை தவிர, வேறு சில விஞ்ஞானிகளும் அணுசக்தி குறித்த ரகசியங்களை சோவியத் யூனியனுக்கு அளித்தனர் என்பதும் உண்மை.
நியூயார்க்கில் பிறந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அணு விஞ்ஞானி, சோவியத் யூனியனுக்கு எப்படி உளவாளி ஆனார்?
சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை கஜகஸ்தானில் நடத்தியது. இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அணுகுண்டானது, ஆகஸ்ட் 9, 1945 இல் ஜப்பானிய நகரமான நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டை ஒத்ததாக இருந்தது தற்செயலான நிகழ்வு அல்ல.
மன்ஹாட்டன் திட்டத்தின் கீழ், அமெரிக்கா வடிவமைத்த அணுகுண்டு தொடர்பான ரகசியங்கள் சோவியத் யூனியனிடம் அளிக்கப்பட்டன.
‘மன்ஹாட்டன்’ என்பது பிரிட்டன் மற்றும் கனடாவுடன் இணைந்து அமெரிக்கா உருவாக்கிய ரகசிய அணு ஆயுதத் திட்டமாகும்.
சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை கஜகஸ்தானில் நடத்தியது.
அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியத் திட்டமான மன்ஹாட்டனில் என்ன நடக்கிறது என்பதை அறிந்த சில நபர்களில் தியோடர் ஹாலும் ஒருவர்.
கடந்த 1925 அக்டோபர் 20 இல், நியூயார்க் நகரில் தொழிலதிபர் ஒருவருக்கு மகனாக பிறந்தார் ஹால். உலக வரலாற்றில் பெரும் மந்தநிலை என்றழைக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், சாதாரண அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாக இருந்தது.
ஆனால் நாட்டில் நிலவிய மோசமான சூழ்நிலை, தியோடர் ஹால் கணிதம் மற்றும் இயற்பியலில் உயர்கல்வி பெறுவதை எந்த விதத்திலும் தடுக்கவில்லை.
தனது 16 வயதில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயில அவர் அனுமதி பெற்றார். அங்கு 1944 இல் பட்டப்படிப்பை முடித்தார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் ஆற்றிய சிறந்த செயல்திறனின் பயனாக, அமெரிக்க அதிகாரிகளின் கவனத்தைப் பெற்றார் தியோடர் ஹால்.
அணுசக்தி திட்டத்திற்காக திறமையான நபர்களை அமெரிக்க அரசு தேடி கொண்டிருந்த வேளையில், தங்களது கண்களில் பட்ட ஹாலிடம், அமெரிக்க அதிகாரிகள் லாஸ் அல்மோஸ் ஆய்வகத்தில் நேர்காணல் நடத்தினர்.
அமெரிக்காவின் அணுசக்தி திட்டத்துக்காக தியோடர் ஹாலை நேர்காணல் செய்த அமெரிக்க அதிகாரிகள். அவருக்கு ரஷ்யாவுடன் தொடர்புடைய ஒரு நபருடன் நெருங்கிய நட்பு இருந்ததை அறிந்திருக்கவில்லை.
தியோடர் ஹால், கல்லூரி காலத்தில் மார்க்சிஸ்ட் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அத்துடன் சவில்லே சாக்ஸ் என்பவர், கல்லூரி விடுதி அறையில் அவருடன் தங்கியிருந்தார் (ரூம்மேட்)..
சவில்லே சாக்ஸ் நியூயார்க் நகரில் பிறந்திருந்தாலும், இடதுசாரி சிந்தனை கொண்ட கம்யூனிஸ்டாக திகழ்ந்தார். அவரது தந்தை சோவியத் யூனியனில் குடியேறியவராக இருந்தார்.
இத்தகைய பின்னணியில் தான், அணுசக்தி விஷயத்தில் ரஷ்யாவுக்கு ரகசிய தகவல் அளிக்கும்படி, தனது நண்பரான தியோடர் ஹாலை, சவில்லே சாக்ஸ் வற்புறுத்தினார்.
தனது நண்பரின் விருப்பத்துக்கு இணங்க, லாஸ் அலமோஸ் ஆய்வகத்தில் இருந்து புளூட்டோனியம் அணுகுண்டு பற்றிய ரகசிய தகவலை சோவியத் யூனியனுக்கு அனுப்பினார் இளம் அணு விஞ்ஞானியான தியோடர் ஹால். சவில்லே சார்ஸ் மூலமாகவே முக்கியமான இந்த தகவல் அனுப்பப்பட்டது.
கடந்த 1997 இல் நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஓர் எழுத்துப்பூர்வ அறிக்கையில், ‘தியோடர் ஹால் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அணு ஆயுதங்கள் மீதான அமெரிக்காவின் ஏகபோக உரிமை குறித்து தான் அஞ்சுவதாக கூறினார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, ‘அணுசக்தியில் சமநிலையை பராமரிக்க, சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களை வைத்திருந்தது’ என்று ஹால் கூறியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாகசாகி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு பற்றிய தகவல்களை சோவியத் யூனியன் திருடியதாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற தருணத்தில் சோவியத் யூனியன் அமெரிக்காவின் நட்பு நாடாக தான் இருந்தது.
“ஹிட்லரின் நாஜி படைகளை எதிர்த்து சோவியத் யூனியன் துணிச்சலாக போரிட்டது. அதன் விளைவாக போரில் ஜெர்மனி பலத்த இழப்புகளை சந்தித்தது.
மேலும் ஜெர்மனியின் நாஜி படையின் பிடியில் இருந்து மேற்கத்திய கூட்டாளிகளை தோல்வியில் இருந்து சோவியத் யூனியன் காப்பாற்றி இருக்கலாம்” எனவும் தியோடர் ஹால் அப்போது கூறினார்
புளூட்டோனியம் அணுகுண்டு குறித்த முக்கியமான தகவல்களை தியோடர் ஹால் சோவியத் ரஷ்யாவுக்கு அனுப்பியதை அறிந்த அந்நாட்டு மக்கள், அவரை ‘தி யங்ஸ்டர்’ என்று அன்புடன் அழைத்தனர்.
இரண்டாம் உலக போரின்போது, ஜப்பானின் நாகசாகி மீது புளூட்டோனியம் அணுகுண்டையும், ஹிரோஷிமாவின் மீது யுரேனியம் அணுகுண்டையும் அமெரிக்கா வீசியது.
அணு ஆயுதங்கள் மீதான அமெரிக்காவின் ஏகபோக உரிமை குறித்து தியோடர் ஹால் அச்சம் கொண்டிருந்தார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஜெர்மனியை பொது எதிரியாகக் கொண்டிருந்தன. அதற்காக இரு நாடுகளும் ஒருவரையொருவர் உளவு பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது.
உண்மையில், சோவியத் யூனியனை எதிர் உளவு பார்ப்பதற்காக அமெரிக்கா ‘வெனோனா’ என்ற திட்டத்தை தொடங்கியது.
அத்துடன் 1946 டிசம்பரில், சோவியத் யூனியனின் உள்துறை அமைச்சகத்துக்கு தங்கள் நாட்டுடன் ரகசிய தகவல் தொடர்பு இருந்ததை அமெரிக்க உளவாளிகளால் புரிந்து கொள்ள முடிந்தது.
இதிலிருந்து, தனது மன்ஹாட்டன் திட்டத்தில் சோவியத் உளவாளிகளும் இருப்பதை அமெரிக்கா அறிந்து கொண்டது.
இதனிடையே, தியோடர் ஹால் 1950 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் PhD படித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் அவர் சோவியத் யூனியனுடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. அதையடுத்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI தியோடர் ஹாலை சந்தித்தது.
ஆனால், மன்ஹாட்டன் திட்ட இரகசியங்களை ரஷ்யாவுக்கு பகிர்ந்தது தொடர்பாக, தியோடர் ஹால் மற்றும் அவரது நண்பர் சவில்லே சாக்ஸிடம் இருந்து FBI ஒப்புதல் வாக்குமூலம் எதையும் பெற முடியவில்லை.
முன்னதாக, மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய ஜெர்மன் விஞ்ஞானியான கிளாஸ் ஃபுச்ஸ் 1949இல் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர், அமெரிக்க அணுசக்தி ரகசியங்களை எதிரிக்கு அனுப்பியதாக ஒப்புக்கொண்டார்.
தியோடர் ஹால் 1950 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த நேரத்தில் FBI அவரைத் தொடர்பு கொண்டது.
தியோடர் ஹால் என்ற பெயரில் வேறு எந்த உளவாளிகளும் இல்லை. மேலும் அவர் சோவியத் யூனியனுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியதற்கான எந்த குறிப்பும் அமெரிக்க உளவுத் துறையிடம் இல்லை.
அத்துடன் மன்ஹாட்டன் திட்டத்திற்கு பிறகு தியோடர் ஹால் பெரும்பாலும் செயலற்ற நிலையில் தான் இருந்தார்.
ஆனால் அதேநேரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாஸ்கோவுடன் தொடர்பு இருந்தது. இதுவே இந்த விவகாரத்தில் ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் சோவியத் யூனியனின் ரகசிய தகவல்களை படிக்கும் திறன் தங்களுக்கு உண்டு என்பதை அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்த விரும்பவில்லை.
இதன் காரணமாகவே, அணு ஆயுத ரகசிய விவகாரத்தில் இருந்து தியோடர் ஹால் தப்பி இருந்தார்.
இருப்பினும் தங்களின் பாதுகாப்பு குறித்து தியோடர் ஹாலும், அவரது மனைவியும் கவலை கொண்டனர். அதையடுத்து நியூயார்க் மருத்துவமனையில் தான் பார்த்துக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் பணியை துறந்தார் ஹால்.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிவாய்ப்பு பெற்றதுடன், தன் மனைவியுடன் பிரிட்டனுக்கு சென்றார் தியோடர் ஹால்.
இருப்பினும், அவரது கடந்த கால நிகழ்வுகள் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்தபோது, 1984 இல் சத்தமின்றி பணி ஓய்வு பெற்றார் தியோடர் ஹால்.
ஆனால், 1996 இல் வெளியிடப்பட்ட ஆவணங்கள், சோவியத் யூனியனுடனான அவரது தொடர்புகளை வெளிப்படுத்தின. இருப்பினும் அதற்குள் சவில்லே சாக்ஸ் உள்பட அனைத்து சாட்சிகளும் இறந்துவிட்டனர்.
“வரலாற்றின் போக்கை திரித்ததாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு அதன் போக்கை நான் மாற்றாமல் இருந்திருந்தால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் அணு ஆயுதப் போர் நடந்திருக்கும்.
உதாரணமாக, 1949 அல்லது 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா மீது அணுகுண்டு வீசப்பட்டிருக்கும்” என்று நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியிருந்தார் தியோடர் ஹால்.
“இவற்றையெல்லாம் தடுக்க ஏதாவதொரு விதத்தில் நான் உதவி செய்திருப்பதாக கருதினால், என் மீதான இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் அந்த பேட்டியில் ஹால் உருக்கமாக கூறியிருந்தார்.
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது, 74 ஆண்டுகளுக்கு முன் அணுகுண்டு வீசப்பட்டது.
அதன் பின்னர் இது நாள் வரை எந்த நாடும் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. இதில் தமக்கும் ஓர் முக்கிய பங்கு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இந்த உலகை விட்டு விடைபெற்றார் தியோடர் ஹால்.