3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது !!
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்து போனது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 31 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று காலை 792 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 549 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 51.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 51 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 49.97 அடியாக குறைந்தது. 17.79 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. 1-8-2019 அன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பின் இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி கரையோரமாக சாகுபடி செய்த நெற்பயிரை காப்பாற்றுவதற்கு போதிய தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அணை கட்டப்பட்ட பிறகு 1965-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கனஅடி தண்ணீர் வந்தது. 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 கனஅடியும், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கன அடி வரையும் தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.