;
Athirady Tamil News

சூறாவளிகள் உருவாவதற்கு எல் நினோ மட்டும்தான் காரணமா? – ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்!!

0

ஓரிடத்தில் குழப்பத்தை விளைவிக்க திட்டமிட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தவறான நேரத்தில் தவறான இடத்தில் புயல் வீசினால் போதும்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண மக்களுக்கு இயற்கை கடந்த ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.

இந்த சூறாவளி விளைவித்த சேதம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான இயற்கை சேதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது புவேர்ட்டோ ரிக்கோவில் வீசிய ஃபியோனா சூறாவளி விளைவித்த சேதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

ஃபியானோ போன்ற வெப்பமண்டல புயல்களின் தீவிரம் மற்றும் அவை எந்த இடத்தை தாக்கும் என்பது சில நாட்களுக்கு முன்புவரை கணிக்க முடியாதவையாகவே உள்ளன.

மேலும் எதிர்பாராத நேரத்தில் வீசும் இந்த சூறாவளிகள் பேரழிவுகளை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.

ஆனால், ஒவ்வொரு பருவத்திலும் சூறாவளிகள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த குறைந்தபட்ச கணிப்பை விஞ்ஞானிகளால் அளிக்க இயலும்.

கடல் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பான, பல தசாப்த தரவுகளிலிருந்து சூறாவளிகளின் தாக்கம் குறித்த கணிப்புகளை விஞ்ஞானிகள் அளிக்கலாம்.

அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விஞ்ஞானிகள், அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த ஆண்டு உருவாகக்கூடிய சூறாவளிகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இந்த மாத தொடக்கத்தில் அளித்துள்ளனர்.

இதில் முக்கியமாக, சூறாவளிகள் வீசும் காலம் எதிர்ப்பார்ப்பதைவிட நீண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அத்துடன் இந்த பருவத்தில் வீசும் புயல் மற்றும் சூறாவளிகளின் எண்ணிக்கையும் ஓராண்டின் சராசரியைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகரித்துவரும் கடல் வெப்பநிலை மற்றும் அதன் விளைவாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள், சூறாவளிகள் உருவாக வழிவகுக்கின்றன.

வழக்கமான இந்த காரணிகளுடன், சூறாவளிகளின் பருவத்தை தீர்மானிப்பதில் மற்றொரு காரணியும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை விஞ்ஞானிகளின் சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்காவின் பூமத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள மேற்கு கடற்கரையில் இருந்து பரந்து விரியும் நீரினால் அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பநிலையில் உண்டாகும் ஏற்றஇறக்கங்கள் ‘அட்லாண்டிக் நினோ’ அல்லது ‘எல் நினோவின் துணை விளைவு’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த விளைவால், அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவைத் தாக்கும் சில சக்திவாய்ந்த சூறாவளிகளைத் தூண்டக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி எச்சரிக்கின்றது.

எல் நினோ (El -nino) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது. அதாவது குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையானது சராசரி வெப்பநிலையைவிட அதிகமாக இருப்பது எல் நினோ எனப்படுகிறது.

எல் நினோ (El -nino) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது.

அட்லாண்டிக் பெருங்கடலில் வெப்பமண்டல புயல்கள் உருவாவதை தீர்மானிக்கும் பல வானிலை அம்சங்களில் இரண்டு காரணிகள் பொதுவானதாக திகழ்கின்றன.

El Nino- Southern Oscillation (ENSO) என்பது ஓர் உலகளாவிய வானிலை முறையாகும். பசிபிக் பகுதியில் நிலவும் இந்த வானிலை, எல் நினோவின் வெப்பமயமயமாதல் கட்டத்திற்கும், லா நினோவின் குளிரூட்டும் கட்டத்திற்கும் இடையில் மாறுகிறது.

எல் நினோவின்போது, பசிபிக் பெருங்கடலில் நிலவும் சராசரியை விட அதிகமாகும் வெப்பநிலை, உலகளாவிய வளிமண்டல சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் அட்லாண்டிக்கில் செங்குத்தாக வீசும் காற்றின் வெட்டுக்களை (வெவ்வேறு உயரங்களில் வீசும் காற்றின் வேகம் மற்றும் திசைக்கு இடையிலான வேறுபாடு) அதிகரிக்கிறது.

காற்றின் வெட்டு அதிகமாக இருக்கும்போது, அவை சாய்ந்து நிலைக்குலையும் அபாயமும் ஏற்படுகிறது.

மாறாக, எல் நினோ வடகிழக்கு பசிபிக் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

மெக்ஸிகோ மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் ஹிலாரி வெப்பமண்டல புயலின் வருகை, 1939க்குப் பிறகு, அந்த மாகாணத்தில் முதன்முறையாக தற்போது நிலவும் வானிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ளது.

ENSO வுக்கு அடுத்ததாக, அட்லாண்டிக்கில் சூறாவளிகளை தீர்மானிக்கும் இரண்டாவது காரணியாக, அட்லாண்டிக் மெரிடியனல் மோட் (AMM) உள்ளது.

இது கடலில் குறைந்த அளவிலான காற்று மற்றும் வெப்பமண்டல கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாக அமைகிறது.

எனவே, ஓரிடத்தில் AMM நேர்மறையான பயன்முறையில் இருக்கும்போது, கடல் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். வெப்பமயமான இந்த சூழல் புயல்கள் உருவாவதற்கான தூண்டுதலை அளிக்கிறது.

இருப்பினும் ஒரு சூறாவளி உருவாவது, அது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக மாறுகிறது, அது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் மற்றும் அது எந்தப் பகுதியில் கரையைக் கடக்கும் என்பதை கடல் வெப்பநிலை மட்டுமின்றி, பல காரணிகள் தீர்மானிக்கின்றன.

ENSO மற்றும் AMM இரண்டு காரணிகளும் கடல் மற்றும் வளிமண்டல சுழற்சிகளின் தொடர்புகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன.

மேலும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் இவற்றின் தாக்கத்தை அளவிடுவது, ஒரு பகுதியில் சூறாவளி ஏற்படுத்தப்போகும் பாதிப்பை கணிக்க உதவுகிறது என்று NOAA கடல்டார் ஆய்வாளரான ஹோஸ்மே லோபஸ் கூறுகிறார்.

ஆனால், இவ்விரு வானிலை முறைகளும் அவை ஆதிக்கம் செலுத்துவற்கான வெவ்வேறு இடங்களைக் கொண்டுள்ளன.

மத்திய வெப்ப மண்டல அட்லாண்டிக் படுகையில் புயல் உருவாவதில் AMM வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதேநேரம், ENSO பொதுவாக கரீபியன் மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் உருவாகும் சூறாவளிகளுக்கு காரணமாக உள்ளது.

மாறாக, அட்லாண்டிக் நினோ எனப்படும் வானிலை முறை, மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் உருவாகும் புயல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சூறாவளி குறித்த இந்த மூன்றாவது சாத்தியமான முன்கணிப்பு ENSO போன்ற வானிலை முறையை உள்ளடக்கியது.

இர்மா சூறாவளி 2017 இல் அமெரிக்காவின் மியாமி, புளோரிடாவை தாக்கியது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசியது.

இருப்பினும் ENSO மற்றும் AMM அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்படுத்திவரும் தாக்கங்கள், எல் நினோவால் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தாக்கத்தைவிட உலக அளவில் குறைவாகவே கவனத்தில் கொள்ளப்படுகிறது.

அத்துடன், இந்த வானிலை மாற்றங்களால் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளின் தாக்கம் குறித்து இதுநாள்வரை குறைவாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல் நினோ டெல் அட்லாண்டிகோவின் இருப்பு பற்றி நாங்கள் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறோம் என்று கூறுகிறார் லோபஸ்.

இவர், சூறாவளியின் பெருக்கத்தில் எல் நினோ போன்றவற்றின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவில் அங்கம் வகித்தவராவார்.

இருப்பினும், சஹேல் மற்றும் வடஆப்பிரிக்க பகுதியில் பொழியும் பருவமழை போன்ற உலகளாவிய சில முக்கியமான இயற்கை நிகழ்வுகளில்,எல் நினோ டெல் அட்லாண்டிகோ தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டதையடுத்து, இதன் மீது ஆய்வாளர்களின் பார்வைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

சஹாரா பாலைவனம் மற்றும் ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதிகளில் வளிமண்டல மாற்றங்களால், பேரழிவை தரும் சூறாவளிகளின் தோற்றம் சாத்தியமற்றது என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.

மாறாக இந்த வளிமண்டல மாற்றங்கள், மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் கேப் வெர்டே தீவுக்கூட்டத்திற்கு அருகே, அட்லாண்டிக் பெருங்கடலில் புயல்களை உருவாக்கலாம். கடல் வெப்பநிலை காரணமாக பின்னர் அவை சூறாவளிகளாக மாறலாம்.

மெக்ஸிகோ வளைகுடாவில் உருவாகும் வெப்பமண்டல புயல்கள், அங்கு நிலப்பகுதியில் கரையைை கடக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால், அவை அதிக சக்தி வாய்ந்த சூறாவளிகளாக மாறுவதற்கு தேவையான ஆற்றலை குறைந்த நேரத்தில் பெற்று விடுகின்றன.

ஆனால், ‘கேப் வெர்டே’ என்றழைக்கப்படும் சூறாவளிகள் கடலின் மேற்பரப்பில் பயணித்து அதன் வெப்பத்தை உறிஞ்சுவதற்கு நிறைய நேரம் எடுத்து கொள்கின்றன.

இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைத் தாக்கும் சூறாவளிகளில் 80-85% கேப் வெர்டியன் வகை சூறாவளிகளாக உள்ளன.

எனவே, எல் நினோ டெல் அட்லாண்டிகோ( இணைப் பெருங்கடல் வளிமண்டல தோற்றம்) ஒரு பருவ காலத்தில் வீசும் சூறாவளியின் அழிவாற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இது அட்லாண்டிக் பெருங்கடலில் தீவிர புயல்கள் உருவாக தூண்டுதலாக உள்ளது.

“உலகளாவிய பருவநிலை மாற்ற தாக்கத்தின் அடிப்படையில், சூறாவளிகள் உருவாவதில் எல் நினோ வானிலை முறை ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆனால், எல் நினோவுடன், ENSO மற்றும் AMMயும் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன” என்று கூறுகிறார் லோபஸ்.

எனவே, அட்லாண்டிக்கில் தற்போது உருவாகும் சூறாவளிகள் குறித்த கணிப்புகளில் ENSO மற்றும் AMM தாக்கம் குறித்து புதிதாக புரிந்து கொள்ளப்பட்டவை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு அட்லாண்டிக் எல் நினோ தற்போது “நடுநிலை”யாக அறியப்படுகிறது என்பதே ஆய்வாளர்களின் பதிலாக உள்ளது.

அதாவது, அட்லாண்டிக் எல் நினோ இந்த ஆண்டு உருவாகுமா என்பது குறித்து தற்போது தெளிவாக தெரியவில்லை என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள NOAA விஞ்ஞானிகளில் மற்றொருவரான டோங்மின் கிம் கூறுகிறார்.

அதாவது, கடல் மற்றும் வளிமண்டல மாற்றம் தொடர்பாக ENSO மற்றும் AMM அளித்துவரு் சமிக்ஞைகளில் விஞ்ஞானிகள் தற்போது கவனம் செலுத்துகின்றனர்.

சூறாவளிகள் உருவாவதில் பருவநிலை மாற்றமும் பங்காற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சூறாவளிகள் குறித்து மார்ச் – ஏப்ரல் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள், இந்த முறை சூறாவளிகள் வழக்கமான அல்லது அதற்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று முன்னறிவித்திருந்தன.

எல் நினோவின் குறிப்பிடத்தக்க மாற்றமே இதற்கு காரணம் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பில் க்ளோட்ஸ்பாக் கூறுகிறார்.

ஆனால், தற்போது எல் நினோ வேகமாக மாறிவருவதன் விளைவாக, அட்லாண்டிக் கடல் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகமாக பதிவு வருகிறது.

இதனடிப்படையில், இந்த ஆண்டு சூறாவளி பருவத்தில் அதன் தாக்கம் இயல்பைவிட அதிகமாக (சுமார் 60%) இருக்கலாம் என்று NOAA இந்த மாத தொடக்கத்தில் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பருவ நிலை மாற்றமும் சூறாவளிகள் உருவாவதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புவி வெப்பமடைதலை பிரதிபலிக்கும் விதத்தில், அட்லாண்டிக் எல் நினோ பலவீனமடையக்கூடும் என்று ஆராய்ச்சிகள் கணித்துள்ளன.

இருப்பினும், இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்களால் புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சூறாவளிகள் உருவாவதை தீவிரமாக்கி உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், புவி வெப்பமயமாதலின் தாக்கங்கள் மற்றும் எதிர்விளைவுகளை முழுமையாக புரிந்துகொள்ள இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை என்கின்றனர் அவர்கள்.

எவ்வாறாயினும், சூறாவளியால் பாதிக்கும் உள்ளாகும் பகுதிகளில் வசிப்பவர்கள், இந்த பருவத்தில் ஓர் அதிவேக சூறாவளியை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த பருவத்தில் புயல்களும் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவை கரைக் கடப்பதற்கான வாய்ப்பும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்கரை பகுதிகளில் எங்காவது சூறாவளி தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த முறை 48 சதவீதம் உள்ளது.

இது இந்தப் பகுதியின் நீண்டகால சராசரியான 43 சதவீதத்தைவிட சற்று அதிகம் என்று கொலராடோ அரசு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.