சௌதி அரேபியா அணுமின் நிலையம் அமைக்க உதவும் சீனா: சிக்கலில் இந்தியா, அமெரிக்கா!!
சௌதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைக்க சீனா ஒரு ஒப்பந்தப் புள்ளியை அளித்துள்ளது. இதை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது.
அணு மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பத்தை சௌதி அரேபியாவுக்கு அளிக்க அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளால் சலித்துப்போன அந்நாட்டு அரசு தற்போது சீனாவின் விருப்பத்தைப் பரிசீலிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லையில் அணுமின் நிலையத்தை அமைக்க சீனாவின் அரசு நிறுவனமான ‘சீனா நேஷனல் நியூக்ளியர் கார்ப்பரேஷன்’ சௌதி அரேபியாவுக்கு முன்மொழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் இந்த முடிவு அமெரிக்காவின் நிபந்தனைகளைத் தளர்த்தும் என்று சௌதி அரேபிய அதிகாரிகள் நம்புகின்றனர். இதில் சௌதி அரேபியாவின் யுரேனியம் அகழ்வு மற்றும் செறிவூட்டல் திட்டத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை போன்ற நிபந்தனைகளும் அடங்கும்.
இருப்பினும் அமெரிக்கா அத்தகைய தளர்வுக்கான எந்த அறிகுறியையும் இதுவரை காட்டவில்லை என்றாலும், அமெரிக்கா இந்தத் தளர்வுகளை அறிவித்தால், சௌதி அரேபியாவின் வளர்ந்து வரும் அணுசக்தித் துறை வேகம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தை மறு செயலாக்கம் செய்வதை ஒப்புக்கொண்டால், சௌதி அரேபியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்க முடியும் என்று அமெரிக்கா ஏற்கெனவே கூறியிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு சீனாவின் உதவியை சௌதி அரேபியா பெறுவதன் மூலம், பைடன் நிர்வாகம் அணு ஆயுத பரவல் தடை விதிகளில் சில தளர்வுகளை அளிக்க முடியும் என்று சௌதி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏனெனில் அரபு நாடுகளில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.
அமெரிக்க நிபந்தனைகளைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், தனது நாட்டில் அணுமின் நிலையங்களை அமைக்க சீன நிறுவனங்களை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அனுமதிக்கலாம் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாக இந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சௌதி அரேபியாவிடம் அமெரிக்காவை போல் நிபந்தனைகளை சீனா விதிப்பதாக எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சௌதி அரேபியா தனது பொருளாதாரம் எண்ணெய் வளங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்ற முயன்று வருகிறது.
அண்மையில் ஈரான் மற்றும் சௌதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஒரு நட்புரீதியான ஒப்பந்தம் ஏற்பட சீனா உதவியது உண்மைதான். ஆனால் சௌதி அரேபியாவுக்கு ஈரானுடன் பழைய பகைமை ஒன்று உள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், சௌதி அரேபியாவும் அதே முயற்சியில் இறங்கும் என அந்நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் கூறி வருகிறார்.
சௌதி அரேபியா ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டத்தைச் செயல்படுத்தினால், அது பிற்காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க உதவும்.
சௌதி அரேபியாவின் ஆற்றல் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குப் போதுமான யுரேனியம் இருப்பு இருப்பதாக இளவரசர் சல்மான் நம்புகிறார். ஆனால், புதிய அணுமின் நிலையம் அமைப்பது சௌதி அரேபியாவிற்கு புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும். இது தவிர, சௌதி அரேபியாவின் புவிசார் அரசியல் சக்தியையும் கணிசமாக அதிகரிக்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில், சௌதி அரேபியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதால் யுரேனியம் பதப்படுத்தும் விஷயத்தில் சௌதி அரேபியா சீனாவின் உதவியை நாட வேண்டும். சௌதி அரேபியா யுரேனியத்தை பதப்படுத்தி அணு எரிசக்தி தயாரிக்கத் தயாராக இருப்பதாக பட்டத்து இளவரசர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
அப்போது, சௌதி அரேபியாவில் அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் அழைக்கப்பட்டு, அவற்றிடமிருந்து பரிந்துரைகள் விரைவில் பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் செயல்படும் உலக விவகாரங்களுக்கான கவுன்சிலின் உறுப்பினரும், மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணருமான ஃபஸூர் ரஹ்மான் சித்திக் இதுகுறித்து பிபிசியிடம் பேசினார்.
அப்போது அவர், “சௌதி அரேபியா தனது பொருளாதாரம் எண்ணெய் வளங்களை மட்டுமொ அடிப்படையாகக் கொண்டிருப்பதைவிட அதை வேகமாக பல்வகைப்படுத்த முயல்கிறது.
எனவே அந்நாட்டு அரசு மாற்று எரிசக்தி குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இயற்கை எரிசக்தி, இயற்கையான தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டடங்கள் எனப் பல்வேறு துறைகளில் மரபுசாரா ஆற்றலைப் பயன்படுத்த இப்போது சௌதி அரேபியா முயற்சித்து வருகிறது,” என்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வருகிறது.
தற்போது சௌதி அரேபியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. ஆனால் அதே நாடு சீனாவுடனான தனது உறவை வலுப்படுத்துவதிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சௌதி அரேபியா இப்போது தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவுடன் நட்புறவையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பது இந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.
அண்மையில், சௌதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் நோக்கிலான ஓர் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வழிவகைகளை உர்ஹவாக்கியதன் மூலம், அரபு நாடுகளில் சீனா தனது செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான ஆதாரத்தை அளித்துள்ளது.
சௌதி அரேபியாவின் ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டத்திற்கு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் அணுசக்தி பயன்படுத்தப்படாததால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத நாடாக அது உள்ளது.
அதே நேரம், அங்கு அணுசக்தி பயன்படுத்தப்படுவதில்லை என்ற போதிலும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதில் இருந்து விலக்கி வைக்கும் உத்தியை அமெரிக்கா நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. முழு மத்திய கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேல் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடு என்று கூறப்படுகிறது. இருப்பினும் இஸ்ரேல் இதுவரை அதை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.
ஈரானை அணுசக்தி நாடாக மாற அனுமதித்தால், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கும் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.
இஸ்ரேல் குறித்து அமெரிக்கா எப்போதும் மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக அரபு நாடுகள் கருதுகின்றன.
அணுசக்தி கொள்கை விஷயத்தில் இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து எப்போதும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் மீது அமெரிக்கா மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது அரபு நாடுகளில் அதன் இரட்டை நிலையாகப் பார்க்கப்படுகிறது.
ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக எகிப்து நீண்ட காலமாகக் கூறி வருகிறது. தற்போது சௌதி அரேபியாவும் இந்த வழியைப் பின்பற்றி வருகிறது என்கிறார் சித்திக்.
“இதற்காக அந்நாட்டு அரசு அமெரிக்காவின் உதவியை நாடியது. ஆனால் அமெரிக்கா அதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இங்குதான் சீனாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவானது.
சீனா தற்போது வளைகுடா நாடுகளில் மிகவும் ஆக்ரோஷமான ராஜதந்திரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஏதாவது ஒருவகையில் செயல்படும் முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது,” என்கிறார் சித்திக்.
மேலும், “அரபு நாடுகளில் இருந்து அமெரிக்காவை அகற்றி, தன்னுடைய செல்வாக்கை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம்,” என்றார்.
இது சௌதி அரேபியாவுக்கு லாபகரமான ஒப்பந்தமாக அமையும். ஆக்கப்பூர்வமான அணுசக்தி திட்டத்தில் அமெரிக்கா உதவினால் அது நன்மை அளிக்கும் வகையில்தான் இருக்கும். ஆனால் அமெரிக்கா அது போல் உதவ மறுத்தால் அந்த இடத்தை நிரப்ப சீனா தயாராக உள்ளது.
அரபு நாடுகளின் அரசியலில் நுழைந்துவிட்டால், அது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சீனா நம்புகிறது.
உண்மையைச் சொல்லப் போனால், மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சீனா சவால் விடுத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு ஏற்றாற்போல் சௌதி அரேபியா தனது முழு வெளியுறவுக் கொள்கையையும் மாற்றி வருகிறது.
சௌதி அரேபியா அமெரிக்காவை சார்ந்து இருப்பதில் இருந்து விலக முயல்வதாக சித்திக் கூறுகிறார். மேலும், “ஆக்கப்பூர்வமாக அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்கா உதவவில்லை என்றால், சீனாவின் உதவியுடன் அந்த வேலையை சௌதி அரசு செய்யும் என்பதற்கான சமிக்ஞை தெளிவாக வெளிப்பட்டுள்ளது,” என்றும் தெரிவிக்கிறார்.
மேலும் பேசிய சித்திக், “அரபு நாடுகளில் சீனா நேரடியாக அமெரிக்காவுக்கு சவால் விடுத்து வருகிறது. அது மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா பேணி வரும் கூட்டணிக்கு எதிராக சவால் விடுவதுடன், அனைத்து முக்கிய நாடுகளாலும் எதிர்க்கப்படும் அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வது பற்றி வெளிப்படையாக பேசுகிறது.
சீனா மற்றும் சௌதி அரேபியா இடையிலான எரிசக்தி துறை சார்ந்த வர்த்தகம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக சீனா உள்ளது. அதே நேரத்தில் சௌதி அரேபியா அதன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது,” என்றார்.
ஆனால் தற்போது இரு நாடுகளும் மாற்று எரிசக்தி துறையிலும் ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றன. சீனாவின் அரசு நிறுவனமான ‘சீனா எனர்ஜி கார்ப்பரேஷன்’, சௌதி அரேபிய நிறுவனமான எஸ்.டபிள்யூ. பவர் (SW Power) உடன் இணைந்து 2.6 GW சூரிய மின்சார உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது, வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டமாக இருக்கும்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சௌதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீன-அரபு உறவுகளுடைய வளர்ச்சியின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது.
சீனா தனது அணுசக்தி தொடர்பான திறன்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜாபின் டி. ஜேக்கப், இந்தியாவில் உள்ள சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய விஷயங்கள் தொடர்பான நிபுணர்களில் நன்கு அறியப்பட்டவர். அவர் தற்போது ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சீனா மற்றும் சௌதி அரேபியா இடையிலான இந்தக் கூட்டணி தொடர்பான அம்சங்களைப் புரிந்து கொள்ள பிபிசி அவரிடம் பேசியது.
அவர், “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து உறுப்பு நாடுகளில் சீனாவும் ஒன்று. அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகவும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலும் அந்நாட்டு அரசு கையெழுத்திட்டுள்ளது. அதுமட்டுமின்றி அணுமின் நிலையத்திற்கான ஒப்பந்தத்தை ஏலம் எடுக்க சீனாவுக்கு உரிமை உள்ளது.
மறுபுறம், சௌதி அரேபியாவின் நட்பு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஆனால் ஆக்கப்பூர்வமான வழியில் அணுசக்தியைப் பயன்படுத்தும் திட்டத்திற்கு சௌதி அரேபியாவுக்கு அமெரிக்கா உதவவில்லை. இதற்கு பல நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதனால்தான் சீனா உதவ முன்வருவதை சௌதி அரேபியா ஏற்றுக்கொள்கிறது,” என்றார்.
மேலும், “அமெரிக்கா அத்தகைய உதவியை வழங்குவதற்கு சிறந்த மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆனால் சீனா அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை. அதனாலும் சீனாவின் உதவியை சௌதி அரேபியா ஏற்றுக்கொள்கிறது,” என்றார்.
இதுமட்டுமின்றி இதற்குப் பின்னால் சீனாவுக்கும் ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. சௌதி அரேபியாவிற்கு உதவுவதன் மூலம் வளைகுடா பகுதியின் அரசியலை மேலும் சிக்கலாக்க சீனா விரும்புகிறது. ஏனெனில் சீனாவின் மிகப்பெரிய எதிராளியாக இருக்கும் அமெரிக்காவுக்கு இதனால் பெரும் பின்னடைவு ஏற்படும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.
அதோடு, “இதன் மூலம், சீனா தனது அரசியல் மற்றும் வணிக நலன்கள் இரண்டையும் அதிகரிக்க முயல்கிறது. நீர் மின் துறையில் பெரும் வல்லரசாக உள்ள சீனா, அணுசக்தித் துறையிலும் பெரிய சக்தியாக மாற விரும்புகிறது. பாகிஸ்தானில் பல அணுமின் நிலையங்கள் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன,” என்றார் ஜேக்கப்.
மேலும், “இந்தியாவின் பார்வையில், சீன அணுமின் நிலையங்கள் அதல சுற்றுப்புறத்திலேயே அமைந்துள்ளன. சௌதி அரேபியாவுடன் நல்லுறவு இருப்பதால் இந்தியாவும் அந்நாட்டில் அணுமின் நிலையத்தை அமைக்க முடியும்.
ஆனால், இந்தியா இதைச் செய்தால், அமெரிக்காவுடனான அதன் உறவு மோசமடைந்துவிடும். அமெரிக்காவுடன் நல்லுறவை தொடரவே இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில் வளைகுடா பகுதியில் சீனா எளிதாக நுழைவதுதான் தற்போது இந்தியாவின் பிரச்னையாக உள்ளது,” என்றார் அவர்.