தங்கையின் காதலன் கொடுத்த மது குடித்த பெண் என்ஜினீயர் பலி- திட்டமிட்ட கொலையா? என விசாரணை!!
ஆந்திர மாநிலம், கொருட்லாவை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. அவரது மகள்கள் தீப்தி (வயது 24) சந்தனா. சாப்ட்வேர் என்ஜினியரான இருவரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை ஐதராபாத்தில் உள்ள சீனிவாஸ் ரெட்டியின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன், மனைவி இருவரும் சென்றனர். வீட்டில் பெற்றோர் இல்லாததால் சந்தனா தனது காதலனுக்கு போன் செய்து வர வழைத்தார். அப்போது காதலன் வாங்கி வந்த மதுவை தனது சகோதரி தீப்தியுடன் சேர்ந்து 3 பேரும் மது அருந்தினர். மது போதை அதிகமானதால் தீப்தி வீட்டில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டார்.
இதன் பின்னர் சந்தனா தனது காதலனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அன்று இரவு சீனிவாஸ் ரெட்டி தனது 2 மகள்களுக்கும் போன் செய்தார். இருவரும் போனை எடுத்து பதில் அளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது சோபாவில் தீப்தி இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் ரெட்டி இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது தீப்தியின் உடலில் காயங்கள் இல்லை. சமையல் அறையில் மது பாட்டில்கள் இருந்தன. தீப்தியுடன் இருந்த சந்தனா காணாமல் போனதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. சந்தனாவின் போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. இந்நிலையில் சந்தனா தனது சகோதரர் சாய் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பினார். அதில் தீப்தி மரணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது காதலன் அவருக்கு மது ஊற்றி கொடுத்தார். கீர்த்திக்கு போதை அதிகமானதால் சோபாவில் படுத்துக்கொண்டார். அதன் பின்னர் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தோம்.
தீப்தியை நாங்கள் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பதிவு செய்து இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து சந்தனாவையும் அவரது காதலனையும் தேடி வருகின்றனர். திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்ததால் தீப்தி இறந்தாரா? அல்லது வேறு யாராவது வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தனா போலீசில் சிக்கினால் தான் தீப்தியின் மரணம் குறித்த மர்மம் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.