தென்கொரியாவை தாக்குவதுபோல ஏவுகணை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட வடகொரியா!!
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் வடகொரியா இந்த பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி எச்சரித்தது. ஆனால் தென்கொரியா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தென்கொரியாவில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது போலவும், போர் ஏற்பட்டால் தென்கொரிய எல்லைகளை ஆக்கிரமிப்பது போலவும் வடகொரியா ஒத்திகை பயிற்சி மேற்கொண்டது. அதன்படி 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது. ஐ.நா. உடன்படிக்கையை மீறும் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.