13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு : I.N.D.I.A. கூட்டணி அறிவிப்பு!!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடைபெற்றது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் வகுத்தல், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவையாக இருப்பதாலும், தலைவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் தோன்றாமலிருக்கும் வகையிலும், தேர்தலுக்கு கூட்டணியை வழிநடத்த 13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டியை இக்கூட்டணி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த சரத் பவார், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர் பாலு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த லல்லன் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சாடா, ஜனதா முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜாதவ் அலி கான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெஹ்பூபா முப்தி ஆகியோரை உள்ளடக்கிய 13-பேர் கொண்ட குழு ஒருங்கிணைக்கும் பணியை கவனிக்கும். “வேற்றுமைகளை மறந்து மக்களவை தேர்தலுக்காக ஒன்றாக பணியாற்ற உறுதியெடுத்துள்ளோம். நாடு முழுவதும் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்த உள்ளோம்,” என்றும் எதிர்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது.