அடுத்த இலக்கு ககன்யான் திட்டம்- இஸ்ரோ தலைவர் தகவல்!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், நாளை காலை 11:50 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், “ஆதித்யா எல்1-க்கு பிறகு, எங்களின் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம். இதன் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.” சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.