;
Athirady Tamil News

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு உடனே அட்டவணையை அறிவிக்க வேண்டும்- ராமதாஸ்!!

0

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு நடப்பாண்டில் புதிதாக அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கும், கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. திறனறித் தேர்வு தமிழ்மொழிக்கு மட்டும் நடத்தப்படும்; ஒரு மாணவருக்கு மாதம் ரூ.1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு ரூ.36,000 பரிசு மொத்தம் 1500 பேருக்கு வழங்கப்படும். இதில் அனைத்துப் பள்ளிகளின் 11-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க முடியும்.

திறனாய்வுத் தேர்வு தமிழ் தவிர்த்த பிற பாடங்கள் அனைத்திற்கும் சேர்த்து நடத்தப்படுவதாகும்; இத்தேர்வில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும்; ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு ரூ.10,000 வீதம் இரு ஆண்டுகளுக்கு ரூ.20,000 பரிசு மொத்தம் 1000 பேருக்கு மட்டும் வழங்கப்படும். எனவே முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தேர்வுகள் துறை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.