ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி அதிரடி!!
செப்டம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக, நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகளை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, இந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை அ.தி.மு.க. கட்சி உறுதியாக ஆதரிக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். “மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும்,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.