அமெரிக்காவில் 4 இந்திய நகைக் கடைகளில் கொள்ளை – 16 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!!
அமெரிக்காவில் 4 கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களின் நகைக் கடைகளை குறிவைத்து பயங்கர ஆயுதங்களை கொண்ட ஒரு கூட்டம் கொள்ளையடித்து வந்தது.
இந்த கடைகளில் பெரும்பாலும் கடையை நடத்துபவரின் குடும்பத்தினரே ஊழியர்களாக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலால் குறி வைக்கப்பட்ட 9 தெற்காசிய நகைக் கடைகளில், 4 கடைகள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. ஜனவரி 7, 2022-இல் இருந்து ஜனவரி 27, 2023 வரையிலான மாதங்களில் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வர்ஜீனியா மற்றும் புளோரிடாவில் ஆசிய அமெரிக்கர்களுக்கு சொந்தமான நகை கடைகளில் இந்த கும்பல் கொள்ளைகளில் ஈடுபட்டது. பெரும்பாலும் சிறு வணிகர்களை குறி வைத்து, பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.
கருப்பு ஆடையுடன் கையுறைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து மாறுவேடமிட்ட இந்த கும்பல், துப்பாக்கி ஏந்தியபடி கொள்ளையடித்து, கொள்ளைக்கு பிறகு தப்பி ஓட எப்பொதும் திருடப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியது. முகமூடியணிந்து திடீரென கடைக்குள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடை பணியாளர்களை மிரள செய்து கைகளில் கிடைக்கும் பணத்தையும், நகைகளையும் எடுத்து கொண்டு வேகமாக ஓடி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தது. பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்ததால், பல மாநில அதிகாரிகளும் ஒன்றுபட்டு கூட்டு நடவடிக்கையின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினர். நீண்ட விசாரணைக்கு பின், பல தடயங்களை வைத்து, இக்குற்றத்தில் ஈடுபட்டதாக 16 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கொள்ளை கூட்டத்தை கைது செய்தனர்.
இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களில் ஒருவர் வீட்டில் இருந்து பல துப்பாக்கிகளும், சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான ரொக்கமும் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது 19 குற்றச்சாட்டுகளுடன், ஹாப்ஸ் சட்டம் எனப்படும் “மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத்தில் தலையிட சதி செய்தல்” எனும் பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 20 வருடங்களுக்கும் மேலான சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். முகமூடி அணிந்து, அச்சுறுத்தி, பெரும் பணமதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பலை ஒருங்கிணைந்து தேடி, வெற்றிகரமாக கண்டுபிடித்த காவல்துறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.